அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு பாடத் திட்டங்கள், 22 ஆண்டுகளுக்குப்
பின் மாற்றப்பட்டு, புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. போட்டித்
தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களைப் போலவே, உயர் தரத்தில், துறைத் தேர்வு
பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதால், தேர்வு எழுதுவோர், இனி அதிக
கவனத்துடன் படித்து எழுத வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள்
தெரிவித்தன.
அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களது கல்வித்
தகுதியை உயர்த்திக் கொண்டு, உயர் பதவிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்று, பதவி
உயர்வு பெற, 1930ல், நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப் போது, வனத் துறை, மீன்
வளத்துறை, வேளாண்மை, கால்நடை, தொழில்துறை என, குறிப்பிட்ட சில துறைகள்
மட்டுமே, துறைத் தேர்வு பட்டியலில் இருந்தன.
சுதந்திரத்திற்குப் பின், படிப்படியாக, அனைத்து துறைகளும் சேர்க்கப்பட்டன.
தற்போது, 172 வகை தேர்வுகளை, டி.என்.பி.எஸ்.சி., நடத்தி வருகிறது.
இத்தேர்வு, ஆண்டுதோறும், மே, டிசம்பர் ஆகிய மாதங்களில், இரு முறை
நடக்கின்றன. போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றி
அமைக்கும்போது, துறைத் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களையும், உயர் தரத்தில்
மாற்றி, முன்னாள் தலைவர் நட்ராஜ், நடவடிக்கை எடுத்துள்ளார். கடைசியாக,
1990ல் மாற்றப்பட்ட பாடத் திட்டங்களே, தற்போதும் நடைமுறையில் இருந்து
வருகின்றன. 22 ஆண்டுகளுக்குப் பின், தற்போது, புதிய பாடத் திட்டங்கள்
தயாரிக்கப்பட்டுள்ளன.
தேர்வு வகை வாரியாக, ஒவ்வொரு தேர்வுக்கும், உரிய பாடத் திட்டங்கள்,
தற்போதைய காலத்திற்கு ஏற்றார்போல், மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, 100
மதிப்பெண்களுக்கும், "விரிவாக விடை அளித்தல்' என்ற முறை உள்ளது. இனி, 80
மதிப்பெண்களுக்கான கேள்விகள், "கொள்குறி (அப்ஜெக்டிவ்) வகை'யில், கேட்கப்
படும். 20 மதிப்பெண்களுக்கான கேள்விகள் மட்டுமே, விரிவாக விடை அளிக்கும்
வகையில் கேட்கப்படும்.
தேர்வு எண்ணிக்கை அதிகரிப்பு : தற்போது, மே, டிசம்பரில், தேர்வு நடந்து
வரும் நிலையில், இனி, கூடுதலாக, செப்டம்பர் மாதத்திலும், ஒரு துறைத் தேர்வு
நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு எடுத்துள்ளது. பாடத் திட்டங்கள், தேர்வு
சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு, தமிழக அரசின் ஒப்புதலை, தேர்வாணையம்
கேட்டுள்ளது. இதற்கு, அரசின் ஒப்புதல், விரைவில் கிடைத்து விடும் என,
கூறப்படுகிறது. அனுமதி கிடைத்ததும், புதிய பாடத் திட்டங்கள் உள்ளிட்ட முழு
விவரங்களும், www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில்
வெளியிடப்படும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களும், கடினமாக்கப்பட்டுள்ள
நிலையில், தற்போது, அரசு ஊழியர் பதவி உயர்வுக்கான பாடத் திட்டங்களிலும்,
தேர்வாணையம், கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், வரும்
ஆண்டுகளில், அரசு ஊழியர்கள், துறைத் தேர்வு எழுத, அதிக கவனமுடன் படிக்க
வேண்டி இருக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் கூறுகின்றன.
அரசு ஊழியர், பதவி உயர்வு பெற, தேர்வாணையம் நடத்தும் துறைத் தேர்வுகளில்,
தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களை பெற்றால்
போதும். பதவி உயர்வு வழங்குவதில், வணிகவரித் துறை மற்றும் வருவாய்த் துறை
ஆகிய இரு துறைகளில் மட்டும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவைச்
சேர்ந்த ஊழியர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இதர துறைகளில், துறைத்
தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற ஊழியர்களில், "சீனியாரிட்டி'படி, பதவி உயர்வு
வழங்கப்படுகிறது என, அரசு ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். "பாடத்திட்டம்
கடுமையாக இருக்கும்பட்சத்தில், தேர்ச்சி பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை
சரியும்; இதனால், பதவி உயர்வு தள்ளிப் போகும்' என, ஊழியர்கள்
தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...