திருக்கச்சூர் உயர்நிலைப் பள்ளிக்கு, புதிய வகுப்பறை கட்டடம் கட்டும்
பணி நிறைவு பெற்று, மூன்று மாதங்களுக்கு மேலாகியும், மின் இணைப்பு
பெறாததால், கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி கிடக்கிறது.
இப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், மேற்கொண்டு
படிக்க மறைமலை நகர் அல்லது சிங்கப்பெருமாள்கோவில் சென்றனர். நீண்ட தூரம்
பயணிக்க வேண்டியுள்ளதால், மாணவர்களின் நலன் கருதி, கடந்த 2007ம் ஆண்டு,
நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை, 300க்கும் மேற்பட்ட மாணவ,
மாணவியர் படிக்கின்றனர். உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட, நபார்டு
திட்டத்தின் கீழ், 1.01 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு
பணிகள் துவங்கப்பட்டன.
வகுப்பறைகள், ஆய்வகம், கழிப்பறை, சுற்றுச்சுவர் ஆகிய வசதிகளுடன், மூன்று
தளங்கள் கொண்ட கட்டடம் அமைக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன் பணி
நிறைவு பெற்றது.
கட்டடத்திற்கு மின் இணைப்பு பெறாததால், பணி முடித்து நீண்ட
நாட்களாகியும், புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி கிடக்கிறது.
நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, சுற்றுச்சுவர்
அமைக்கும் பணி துவக்கப்படவில்லை.
இரவு கால்நடைகள் புதிய கட்டடத்தில் அடைவதால், கட்டடம் மாட்டுத் தொழுவமாக
மாறி விடுகிறது. எனவே, மாணவர்கள் நலன் கருதி, புதிய கட்டடத்தை
பயன்பாட்டிற்கு கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
பெற்றோரும், மாணவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"கட்டடப்
பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன. புதிய கட்டடத்திற்கு மின் இணைப்பு
பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இணைப்பு பெறப்படும்.
சுற்றுச்சுவர் அமைக்க, பள்ளி நிர்வாகம் இதுவரை நிலம் கையகப்படுத்தி
தராததால், பணிகளை மேற்கொள்ள முடியவில்லை" என்றார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி கூறுகையில், "பள்ளிக்கு
சுற்றுச்சுவர் அமைக்க, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளதால்,
நிலத்தினை அளவீடு செய்து தருமாறு, வருவாய் அதிகாரிகளிடம் மனு
கொடுத்துள்ளோம். விரைவில், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...