கட்டாயக் கல்வி சட்டம் காரணமாக பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், சீட் வழங்குவதற்கு, தனியார்
பள்ளி நிர்வாகங்கள், ஏகப்பட்ட கெடுபிடிகளை விதிக்க திட்டமிட்டுள்ளன.
இதனால், அட்மிஷன் எளிதில் கிடைக்குமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி
சட்டம் அமலாவதற்கு முன்வரை, தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது முதல்
வகுப்பு சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. வசதியான
குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் என்றில்லாமல், அனைத்து தரப்பு
குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும், நுழைவுத் தேர்வில் பங்கேற்றன.
இடங்கள்
கிடைத்தன. தற்போது, கட்டாயக் கல்வி சட்டம் அமலுக்கு வந்துவிட்ட நிலையில்,
வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, மேற்கண்ட சட்ட விதிமுறைகளின்படி
நடைபெற உள்ளது.
கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது;
பெற்றோருக்கு, நேர்முகத் தேர்வு நடத்தக் கூடாது. நன்கொடை பெறக்
கூடாது.ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்கை எனில், பள்ளி அமைந்துள்ள இடத்தில்
இருந்து, ஒரு கி.மீ., சுற்றளவுக்குள் உள்ள குழந்தைகளுக்கு, சீட் வழங்க
வேண்டும்.
எட்டாம் வகுப்பு வரையிலான, நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கை எனில், 3
கி.மீ., சுற்றளவிற்குள் வசிக்கும் மாணவ, மாணவியருக்கு சீட் வழங்க வேண்டும்.
நடைமுறையில், பெரும்பாலான மாணவ, மாணவியர், 6 - 10 கி.மீ., தொலைவில் உள்ள
பள்ளிகளுக்குச் சென்றும் படிக்கின்றனர்.
இதனால், பெற்றோர் விரும்பும் பள்ளிகளில், குழந்தைகளுக்கு சீட்
கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். மேலும், ஆரம்ப நிலை சேர்க்கை
வகுப்பில் உள்ள மொத்த இடங்களில், 25 சதவீதத்தை, வறுமை மற்றும் சமுதாயத்தில்
பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய
வேண்டும்.
இந்த ஒதுக்கீட்டை, கடந்த கல்வியாண்டில், தனியார் பள்ளிகள் சரிவர
கடைபிடிக்காத நிலையில், வரும் கல்வியாண்டில், இந்த ஒதுக்கீட்டின் கீழ்
நடக்கும் சேர்க்கையை, தீவிரமாக கண்காணிக்க, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம்
திட்டமிட்டு உள்ளது.
மாணவ, மாணவியர் சேர்க்கை விதிமுறைகள் ஒருபக்கம் இருந்தாலும், கட்டணம்
செலுத்தக் கூடிய திறன் படைத்த பெற்றோர், வீட்டு அமைவிடம் ஆகியவற்றின்
அடிப்படையில், சீட் வழங்க, பள்ளி நிர்வாகங்கள் முடிவு எடுத்துள்ளன.
இதுகுறித்து, தனியார் பள்ளிகள் வட்டாரங்கள் கூறியதாவது: நுழைவுத் தேர்வு
ரத்து செய்யப்பட்டு விட்டதால், சேர்க்கையை எப்படி நடத்துவது என்றே
புரியவில்லை. எனினும், பள்ளி நிர்வாகம் நிர்ணயிக்கும் கட்டணங்களை
செலுத்தக்கூடிய திறன், பெற்றோருக்கு இருக்கிறதா என்பதை, முதலில் பார்க்க
திட்டமிட்டு உள்ளோம்.
இரண்டாவது மாணவ, மாணவியரின் வீடு, அருகாமையில் இருக்கிறதா என்றும்
பார்ப்போம். மூன்றாவதாக, பரிந்துரைகளின் கீழ் வரும் மாணவ, மாணவியரையும்,
பரிசீலிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
விண்ணப்பங்கள் குறைவாக வந்தால், சீட் வழங்குவதில் பிரச்னை ஏற்படாது.
ஆனால், அதிகளவு விண்ணப்பங்கள் வந்தால், யார், யாருக்கு சீட் வழங்குவது;
யாரை நிராகரிப்பது என்பதில், பிரச்னை ஏற்படும். நிராகரிக்கப்படும்
குழந்தைகளின் பெற்றோருக்கு, எந்த காரணத்தைச் சொல்வது என்றும் தெரியவில்லை.
இவ்வாறு, தனியார் பள்ளி வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னணி தனியார் பள்ளிகளில், வழக்கம் போல், டிசம்பர், ஜனவரி மாதங்களில்
சேர்க்கை நடத்தினர். ஆனால், கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, சேர்க்கைப்
பணிகளை, மே மாதம் தான் துவங்க வேண்டும் என்பதால், இதன்படியே பள்ளிகள்
செயல்பட வேண்டும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் கண்டித்தது.
இதனால், பெரும்பாலான பள்ளிகள், சேர்க்கையை உடனடியாக நிறுத்திவிட்டன.
இந்த பள்ளிகளில், மே மாதத்தில் சேர்க்கை நடைபெற உள்ள நிலையில், பள்ளி
நிர்வாகங்கள் இப்போதே, ஏகப்பட்ட கெடுபிடிகளை விதித்து வருவதால், விரும்பிய
பள்ளிகளில், சீட் கிடைக்குமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது.
விரைவில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை: மாணவர் சேர்க்கையில், பள்ளிகள்
தெளிவில்லாத நிலையில் இருப்பது குறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரக
வட்டாரங்கள் கூறியதாவது: சேர்க்கை குறித்து, இலவச மற்றும் கட்டாயக் கல்வி
சட்டத்தில், பல்வேறு விதிமுறைகள் கூறப்பட்டு உள்ளன.
எனினும், இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு புரியும் வகையில்,
தெளிவான வழிகாட்டுதல் அடங்கிய சுற்றறிக்கையை, விரைவில் பள்ளிகளுக்கு அனுப்ப
திட்டமிட்டு உள்ளோம். கட்டாயக் கல்வி சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள
அனைத்து விதிமுறைகளையும், பள்ளி நிர்வாகங்கள், 100 சதவீதம் கடைபிடிக்க
வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
இவ்வாறு, இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...