"பொதுத் தேர்வில், முறைகேடுகளுக்கு உடந்தையாக, பள்ளி நிர்வாகங்கள்
செயல்பட்டால், சம்பந்தபட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ய, நடவடிக்கை
எடுக்கப்படும்" என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா எச்சரித்துள்ளார்.
தேர்வு மையங்களில், பறக்கும் படை குழுவினர், அவ்வப்போது சென்று,
தேர்வுகளை கண்காணிப்பர். மாநிலம் முழுவதும், 4,000த்திற்கும் மேற்பட்ட
கண்காணிப்பு உறுப்பினர்கள், தேர்வுப் பணிகளை கண்காணிப்பர். அறிவியல்
மற்றும் கணிதப்பாட தேர்வுகளின் போது, வேறு பள்ளிகளைச் சேர்ந்த தலைமை
ஆசிரியர்கள், முதன்மை கண்காணிப்பாளர்களாக இருப்பர்.
அண்ணா பல்கலை அலுவலர்களும், தேர்வு மையங்களை பார்வையிடுவர். தேர்வு
நேரங்களில், பள்ளியைச் சேர்ந்த தாளாளர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள்
யாரும், தேர்வு மைய வளாகத்தில் இருக்கக் கூடாது.
துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாளை பார்த்து எழுத முயற்சித்தல்,
பிற மாணவரைப் பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக
நடந்துகொள்ளுதல், தேர்வுத்தாளை மாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் செய்தல்
போன்ற செயல்பாடுகள், கடும் குற்றங்களாகும். இந்த செயல்களில்
ஈடுபடுவோருக்கு, உரிய தண்டனைகள் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு, ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டு, 229 மாணவர், தண்டனை
பெற்றனர். தேர்வு மையங்களில், ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ,
ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகங்கள் முயன்றால், சம்பந்தபட்ட பள்ளிகளின் தேர்வு
மையத்தை ரத்து செய்வதுடன், அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும்
நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறைவாசிகள், சிறை வளாகத்திலேயே, தேர்வை எழுத, சில ஆண்டுகளாக அனுமதி
வழங்கப்படுகிறது. அதன்படி, சென்னை, புழல் சிறை வளாகத்தில், 40 சிறைவாசிகள்,
இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர். சிறை வளாகத்திலேயே, தேர்வு
மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வசுந்தரா கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...