அரசு தொடக்கப் பள்ளிகளில், குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை
அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வித்தரத்தை மேம்படுத்தவும்,
பள்ளி கல்வித்துறை சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள்
வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில், துவக்க நிலையில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை
குறித்து பள்ளி கல்வி துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதில், மாணவர்களின்
எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. பல
பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 40 மாணவர்களுக்குள் மட்டும்
படிக்கின்றனர். இதனால், அரசு கொண்டு வரும் திட்டங்களும், முயற்சிகளும்
வீணாகி வருகின்றன.
இதே நிலை நீடித்தால், ஓரிரு ஆண்டுகளில் பல அரசு பள்ளிகள் மூடும் நிலை
ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்த்து, பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை
அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி தரத்தை மேம்படுத்தவும்
அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
முதல்கட்டமாக, தமிழ் வழி, ஆங்கில வழி கல்விக்கு தேவையான ஆசிரியர்கள்
நியமிக்கப்படவுள்ளனர். இதற்காக, பள்ளி வாரியாக தேவைப்படும் ஆசிரியர்களின்
எண்ணிக்கை குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த கல்வியாண்டில், பள்ளி திறப்பதற்கு முன் ஆசிரியர் தகுதி தேர்வு
நடத்தி, ஆசிரியர்கள் நியமிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போதுள்ள
ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த பயிற்சி முழுவீச்சில் வழங்கப்படவுள்ளது.
இதில், தனியார் பள்ளிகளை போன்று, விளையாட்டு முறையுடனும், எளிமையான
முறையிலும் கல்வி கற்பிக்க ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
இதற்கு தேவைப்படும் பயிற்சிகள், பயிற்சியாளர்கள் விபரம் ஆகியவை
தயாரிக்கும் பணி நடக்கிறது. அதுபோல், பள்ளி நிர்வாகத்தை மேம்படுத்தும்
வகையில் தலைமை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதற்கான, முதல்கட்ட பயிற்சி முகாம் இரு நாட்களுக்கு முன் துவங்கியது.
தேர்வு நேரம் நெருங்குவதால், இப்பயிற்சி தற்காலிகமாக ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது. ஏப்., மாத இறுதியில் மீண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு
ஒத்திவைக்கப்பட்ட பயிற்சி வழங்கப்படவுள்ளது.
பள்ளி திறக்கப்படும் போது, மாணவர்களை கொண்டு சிறப்பு விழிப்புணர்வு
பேரணி நடத்தவும், பள்ளி மேலாண்மை குழு, கிராம கல்விக்குழு உறுப்பினர்களை
கொண்டு வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு
செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை கணிசமாக உயரும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் காத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...