Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்ப் பல்கலைக்கு நிதிச்சிக்கல் தீருமா?

  
      பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டங்களை பெறும் வகையில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தை, உயர்கல்வித்துறையின் கீழ் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


       மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில், 1981ம் ஆண்டு, அப்போதைய முதல்வரான, எம்.ஜி.ஆர்., அறிவிப்பின் படி, 1,000 ஏக்கர் நிலப்பரப்பில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. அதன் முதல் துணைவேந்தரான, வ.அய்.சுப்ரமணியம், முயற்சியால், தமிழுக்கே உரிய ஐந்திணைகள் அமைப்பில், ஐந்து புலங்கள் உருவாக்கப்பட்டன.
          இந்த பல்கலைக்கு, காஞ்சிபுரம், சென்னை, மண்டபம், உதகையில் பல்வேறு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. எம்.ஜி.ஆர்., ஆட்சிக்குப் பின், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டை நடத்தியதுடன், மாநாடு நடத்த, பெரிய அரங்கத்தை, கட்டி, திறந்து வைத்தார்.
        இதற்கிடையில், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான, தமிழக அரசின் நிதியுதவியானது, பல்கலைக்கழக ஊதியக்குழுவின் பரிந்துரைக்கேற்ப மாற்றப்படாமல், அதே அளவில் வழங்கப்பட்டதால், நிதியைப் பெருக்க இயலவில்லை.அதனால், மாணவர்களை சேர்த்து, பாடம் நடத்தும், பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது.
        முதலில், உயர்கல்வித்துறையின் கீழ் இருந்த, தஞ்சை பல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சித் துறையின் அங்கமாக மாற்றப்பட்டதில் இருந்து, உயராய்வு மையம் என்ற தகுதியை இழந்தது. தற்போது வரை, பல்கலைக்கான அனைத்து தேவைகளும், தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாகவே, அரசிற்கு செல்கின்றன.
          கவர்னரால் தேர்ந்தெடுக்கப்படும் துணைவேந்தர் கூட, தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் உள்ள, துறை உறுப்பினராகவே கருதப்படும் நிலை உள்ளது. புகழ்பெற்ற பேராசிரியர்களுக்கு கூட, ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை, தற்போது உள்ளது.
        கடந்த ஆட்சியில், நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில், தமிழ் பல்கலை சார்பில், ஆய்வரங்கம் நடத்தப்பட்டது. அப்போது, பல்கலைக்கு ஒதுக்கப்பட வேண்டிய, 100 கோடி ரூபாய், செம்மொழி மாநாடு நடத்த, தமிழ் வளர்ச்சிக் கழகத்திற்கு அளிக்கப்பட்டது.
         இன்றளவும், பல்கலைக்கு வரவேண்டிய பல நிதியுதவிகள், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின், பிற நிறுவனங்களுக்கு மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், பணியாற்றும் பேராசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட திண்டாடும் சூழலில், தமிழ் பல்கலைக்கழகம் தத்தளித்து வருகிறது.
          மூன்றாவது முறையாக, முதல்வர் ஜெயலலிதா, ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், "தனித்தன்மை இழந்த தமிழ்ப் பல்கலைக் கழகத்தை தரணி போற்றும் நிலைக்கு உயர்த்துவோம்" என்று அறிவித்தார்.
           இப்பல்கலைக் கழகத்தின் உண்மை நிலையறிந்து, உயர்கல்வித் துறையின் கீழ், தமிழ் பல்கலைக்கழகத்தை, தனித்தியங்கும் உயராய்வு மையமாக மாற்றி, ஆண்டுதோறும், பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும், சம்பளத்திற்கும், உரிய மானியத்தை வழங்க வேண்டும் என, தமிழறிஞர்கள், மாணவர்கள், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive