நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள்
திருப்திகரமான வகையில் இயங்கவில்லை. உலகிலுள்ள தரமான, 200
பல்கலைகழகங்களில், இந்திய பல்கலைகழகம் எதுவும் இடம் பெறவில்லை; இந்த நிலை
மாற வேண்டும்.
தரத்திற்கும், தொழில் நுட்பத்திற்கும், பல்கலைகழகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.மத்திய பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
நம் நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்கள் எல்லாம், வெறும் பட்டதாரிகளை உருவாக்கும் மையங்களாக மட்டுமே செயல்படுகின்றன. சமூகத்தில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில், பாடத் திட்டங்களை தயாரித்து, அதனடிப்படையில், பட்டதாரிகளை உருவாக்கும் நிலை காணப்படவில்லை.
படித்த பாடம் ஒன்றாக இருக்கிறது; வேலைவாய்ப்பு வேறு மாதிரி உள்ளது. இது மிகவும் மோசமான நிலை; இதை சரி செய்ய வேண்டும். உயர்கல்வி நிறுவனங்கள் நிறைய உள்ளன. ஆனால், அவற்றின் செயல்பாடுகள் எல்லாம், எதிர்பார்க்கும் அளவுக்கு திருப்தியாக இல்லை. இந்நிறுவனங்கள் சரிவர செயல்படாதது கவலை அளிப்பதாக உள்ளது.
மேம்படுத்த வேண்டியது அவசியம்: உலகளவில், சர்வதேச தர பல்கலைகழகங்கள் என, 200 பல்கலைகழகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த பட்டியலில், இந்திய பல்கலைகழகங்களில் ஒன்று கூட இடம் பெறவில்லை.
பல நாடுகளில் காணப்படும், மிகச்சிறந்த தொழில்நுட்ப தரத்தையும், இங்குள்ள கல்வி நிறுவனங்களில் காண முடியவில்லை. இந்தியாவில், உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை, மேம்படுத்த வேண்டியது அவசியம்; இதற்கு ஏற்ற வகையில், இந்நிறுவனங்களுக்கு, வசதிகள் இருக்க வேண்டும்.
குறிப்பாக, தன்னாட்சி அதிகாரங்களும், தேவைக்கு ஏற்ப முடிவு எடுக்கும் சுய அதிகாரமும், வழங்கப்பட வேண்டும். முன் எப்போதும் இல்லாத வகையில், 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், மத்திய அரசு சார்பில், 51 கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.
ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., போன்ற உயர் கல்வி நிறுவனங்களும் இதில் அடங்கும். கடந்த, 2004ல், 17 ஆக இருந்த மத்திய பல்கலைகழங்கள் எண்ணிக்கை, 2010ல், 44 ஆக உயர்ந்துள்ளது. கோவாவை தவிர, அனைத்து மாநிலங்களிலும், மத்திய பல்கலை கழகங்கள் உள்ளன.
உயர் கல்வி துறையில், அரசு அடுத்தடுத்து மேற்கொண்ட, தீவிர நடவடிக்கைகளால், நாடு முழுவதும், 19 ஆயிரம் கல்லூரிகள் பயனடைந்துள்ளன. இதனால், 25.9 கோடி மாணவர்கள், உயர் கல்வி பயிலும் சூழ்நிலை உருவாகியுள்ளது; இந்த நிலை மட்டும் போதாது. இந்த உயர் கல்வி நிறுவனங்களை, உலக தரத்திற்கு இணையானதாக மாற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...