Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கடைசிநேர படிப்பு - அதிக மதிப்பெண்களைத் தருமா?


          நம்மில் பலருக்கு ஒரு பழக்கம் உண்டு. நெருக்கடியில் இருக்கும்போதுதான், ஒரு காரியத்தை சிறப்பாக செய்ய முடியும் என்பதே அது. நெருக்கடி என்பது நமது சிறந்த நண்பர் என்று நினைக்கிறோம்.
 
          மர்பியின் சட்டம் என்ற பெயரில் ஒரு நகைச்சுவை சொற்றொடர் ஒன்று உண்டு. "தவறாக போக முடிந்த ஒன்று, தவறாக போகும்" என்பதுதான் அது. இது தேர்வு நேரம். வாழ்க்கையில் அனைத்தையும் மறந்து, தேர்வை நோக்கி மட்டுமே, மாணவர்களின் கவனமெல்லாம் குவிந்திருக்கும் நேரமிது. படிப்பதற்கென்று தற்போது நமக்கிருக்கும் நேரம், நமது படிக்கும் வேகம் மற்றும் நாம் எந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை வைத்து, கால அட்டவணையை தயாரிக்கிறோம். ஆனால், பொதுவாக, இத்தகைய திட்டமிடுதலில், பிரச்சினைகள் சூழ்ந்திருக்கும் ஒரு சூழலில் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம். நமக்கு வெளியே இருக்கும் விஷயங்களால் நாம் கவரப்படுகிறோம் அல்லது பாதிக்கப்படுகிறோம்.

        இதுபோன்ற விஷயங்களை நம்மால் தீர்மானிக்க முடியாது. கடைசி நேரத்தில், நமக்கு திடீர் காய்ச்சல் உண்டாகலாம். ஏதேனும் சிக்கலில் இருக்கும் நண்பர், நமது உதவியை எதிர்பார்க்கலாம் அல்லது முன்னறிவிப்பு ஏதுமின்றி, யாரேனுமொரு உறவினர், நம் வீட்டிற்கு வெளியூரிலிருந்து வந்துவிடலாம்.

         எனவே, கடைசிநேர தொந்தரவுகள் என்பவை, பல நேரங்களில் தவிர்க்க முடியாதவை. எனவே, அவற்றை சமாளிக்கும் வகையில் உங்களை, நீங்கள் தயார்படுத்திக் கொள்வதே ஒரே வழி. உங்களது முன்னுரிமை மற்றும் இலக்குகளை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளவும். மற்றவர்கள், உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி குழப்பிக்கொள்ள வேண்டாம். அதேநேரத்தில், இதுபோன்ற எதிர்பாராத சிக்கல்களுக்காக உங்களை தயார்படுத்திக் கொள்வதே சிறந்தது. நீங்கள் தயாரிக்கும் காலஅட்டவணை கடுமையானதாக இருக்க வேண்டாம். மாறாக, நெகிழ்வுத்தன்மையுள்ள, ஏதேனும் இடையில் தொந்தரவு நேர்ந்தால், சமாளித்து நிறைவுசெய்யக்கூடிய வகையிலான ஒரு கால அட்டவணையை தயார் செய்யவும்.

             பொதுத்தேர்வுகள் என்பவை, ஒவ்வொரு மாணவரின் வாழ்விலும் ஒரு மிக முக்கிய தருணம். அதன்பொருட்டு, ஒருவருக்கு, நீண்டகால திட்டமிடலும், அர்ப்பணிப்புள்ள உழைப்பும் தேவை. பொதுவாக, நகர்ப்புறங்களில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. "கடைசிநேர முயற்சி, நல்ல பலனைத்தரும்" என்பதுதான் அது. ஆனால் உண்மை என்னவெனில், ஒரு விஷயத்தை படித்து முடித்தப் பின்பாக, அதன் அதிகளவு மறதி என்பது, முதல் 24 மணிநேரத்திற்குள்தான் நடக்கிறது.

              ஒரு புதிய பாடத் தலைப்பை, கடைசி நேரத்தில் படிப்பதென்பது சரியான செயல்பாடல்ல. அந்த விஷயத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் படித்தால்தான், அது உங்களின் நீண்டகால ஞாபகத்திறனில் பதியும். கடைசிநேர படித்தலின் ஒரு பெரிய தீமை என்னவென்றால், அது உண்டாக்கும் கவலை. நெருக்கடி என்பது, ஒருவரின் செயல்பாட்டை இன்னும் சிறப்பாக்க உதவும் என்றாலும், அதிகப்படியான நெருக்கடி பல விஷயங்களை தடுமாற செய்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒத்திபோடுதல் என்பது, கடைசிநேரத்தில் கலவர சூழலையே உருவாக்கும்.

              எதிர்பாராத இடைஞ்சல்கள் என்பவை நமது வாழ்வில் தவிர்க்க முடியாதவைதான் என்றாலும், முதலில் இருந்தே திட்டமிட்டு படித்து வந்தவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது. ஏனெனில், முதலிலேயே ஒரு விஷயத்தை சில தடவைகள் படித்தவருக்கு, கடைசி நேரத்தில், அதை ஒருமுறை திரும்பி பார்க்கும்போது, அதை எளிதாக கிரகிக்க முடியும். எனவே, கடைசிநேர படித்தலை நம்பி, தடுமாறி விழாமல், நேரம் இருக்கும்போதே, அதை வீணாக்காமல் சிறப்பாகப் படித்துவிட வேண்டும். அப்போதுதான், கவலையும், பதட்டமும் இல்லாமல், நம்மால் சிறப்பாக பொதுத்தேர்வுகளை வெற்றிகொள்ள முடியும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive