மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வரும் 28ம் தேதி, 2013-14ம்
நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார். 2014ம்
ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தல், பணவீக்க உயர்வு, அதிகரித்துள்ள நடப்பு
கணக்கு பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றை
மனதில் கொண்டு, அனைத்து தரப்பினருக்கான பட்ஜெட்டை உருவாக்கும் பெரும்
பொறுப்பு அவருக்கு உள்ளது.
அதே சமயம், மக்களுக்கு, விலைவாசி
குறையுமா, சமையல் எரிவாயுவிற்கான கட்டுப்பாடு அடியோடு நீக்கப்படுமா என்பது
போன்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.வருமான வரி வரம்பு உயர்த்தப் படுமா, வீட்டு
கடன் வட்டிக்கான வரிச் சலுகை கூடுமா என்பது போன்ற எதிர்பார்ப்புகளும், வரி
செலுத்துவோருக்கு உள்ளன. இவற்றுக்கான விடை, அடுத்த 16வது நாளில் தெரிந்து
விடும். இந்நிலையில், வரி செலுத்துவோரின் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை இனி பார்க்கலாம்.வருமான வரி வரம்பு :
தற்போதுள்ள வருமான வரி வரம்பை, 2 லட்சம் ரூபாயில் இருந்து, 3 லட்சம்
ரூபாயாக உயர்த்த வேண்டும். 10 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட வருவாய்க்கு,
உச்சபட்சமாக, 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதே மதிப்பிலான தொகைக்கு,
ரஷ்யாவில், 13 சதவீதமும், ஹாங்காங்கில், 17 சதவீதமும், சிங்கப்பூரில், 20
சதவீதம் என்ற அளவில் தான் வரி விதிக்கப்படுகிறது.
அதை
பின்பற்றி, உச்சபட்ச வரி வரம்பிற்கான வருமானத்தை, 10 லட்ச ரூபாயில் இருந்து
20 லட்ச ரூபாயாக உயர்த்தலாம். நேரடி வரிகள் குறித்து, பார்லிமென்ட்
நிலைக்குழு, மத்திய அரசுக்கு அளித்த பரிந்துரையை பின்பற்றலாம். வீட்டு
வாடகைப் படிவீட்டு வாடகைப் படிக்கான வரி விலக்கு, முதல் நிலை நகரங்களுக்கு,
50 சதவீதமாகவும், இரண்டாம் நிலை நகரங்களுக்கு, 40 சதவீதமாகவும் உள்ளது.
சிறு நகரங்களிலும், வாழ்க்கை செலவினம் உயர்ந்துள்ளதால், இதை, அனைத்து
நகரங்களுக்கும் பொதுவாக, 50 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்.
வீட்டு வசதிக் கடன் : வீட்டு வசதி கடனில், ஆண்டுக்கு, 1.50 லட்ச ரூபாய்
வரை செலுத்தப்படும் வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதை, 5 லட்ச
ரூபாயாக உயர்த்தலாம். கடந்த, 1999ம் ஆண்டுக்குப் பிறகு, இந்த வரம்பு
உயர்த்தப்படவில்லை. அதே சமயம், நிலத்தின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்து
விட்டது. வட்டியும் அதிகரித்துள்ளது. வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டால்,
ரியல் எஸ்டேட் துறையிலும் முதலீடு குவியும்.
மருத்துவ செலவினங்கள் : தற்போது, ஒருவர் தமக்கும், குடும்பத்தாருக்கும்
செய்யும், 15 ஆயிரம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவினங்களுக்கு, வரி
விலக்கு அளிக்கப்படுகிறது. இதை, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தலாம்.
பயணப்படி : தற்போது,
ஒரு நிறுவனம், அதன் ஊழியருக்கு மாதம், 800 ரூபாய் வரை வழங்கும்
பயணப்படிக்கு, வரி விலக்கு வழங்கப்படுகிறது. இந்த வரம்பை, 3,500 ரூபாயாக
உயர்த்த வேண்டும்.
கடந்த 1997ம் ஆண்டுக்குப் பிறகு, இதுவரை இந்த வரம்பு உயர்த்தப்படவில்லை.
அதே சமயம், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டன.பல
ஆண்டுகளாக, ஒரு லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டிற்கு, வருமான வரிச்
சட்டம், 80 சி., பிரிவின் கீழ் வரி விலக்கு வழங்கப்படுகிறது. இந்த வரம்பை, 3
லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். இதனால், பல்வேறு சேமிப்பு திட்டங்களில்,
முதலீடு அதிகரிக்கும்.
கல்வி செலவினங்கள் : கல்வி சார்ந்த செலவினங்கள் அனைத்திற்கும், வரிச்
சலுகை வழங்க வேண்டும். தற்போது, கல்விப் பயற்சிக் கட்டணத்திற்கு மட்டுமே,
80 சி., பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இச்சலுகை, பள்ளி
சேர்க்கை கட்டணம், விடுதிக் கட்டணம் போன்றவற்றுக்கும் விரிவுபடுத்த
வேண்டும். இந்தியாவில் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகி வருகின்றன.
கல்விச் செலவினமும் அதிகரித்து வருகிறது. அதனால், 10 லட்சத்திற்கு மேற்பட்ட
கல்விச் செலவினத்திற்கு, 80 சி., பிரிவின் கீழ், தனி வரம்பை
ஏற்படுத்தலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...