இலங்கை நாட்டு வீரர்கள் பங்கேற்பதால் 20-வது
ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர்
ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 20-வது ஆசிய தடகளப்
போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின்
ஒத்துழைப்புடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப்
போட்டிகளில் 44 நாடுகளின் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்றும்
அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ரூ40 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்தது.
இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் 12 வயதே ஆன
சிறுவன் பாலச்சந்திரனை கைது செய்து இலங்கை அரசு கோரமாகப் படுகொலை
செய்திருக்கிற புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இது இலங்கையின் அப்பட்டமான
போர்க் குற்றம் என்று நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம்
தெரிவித்திருந்தார். மேலும் இது ஒரு இனப்படுகொலை என்றும் கண்டனம்
தெரிவித்திருந்தார்.
இதன் எதிரொலியாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை நாட்டு வீரர்களும் கலந்து
கொள்கின்றனர். இதனால் தமிழக அரசால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த
முடியாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவின்
அறிக்கை விவரம்: உடல் உறுப்புகளின் பணிகளை ஒழுங்குபடுத்துவதற்கும்,
நினைவாற்றலை பலப்படுத்துவதற்கும், இளைஞர்களின் உள்ளக் கிடக்கைகளை
வெளிப்படுத்துவதற்கும், ஆற்றல்களை வெளிக்கொணருவதற்கும், உடல் புத்துணர்ச்சி
பெறுவதற்கும், நம் நாட்டு இளைஞர்களின் ஆற்றல் உலகெங்கும் பரவுவதற்கும்
இன்றியமையாததாக விளங்குவது விளையாட்டு என்றால் அது மிகையாகாது.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில்,
பன்னாட்டு தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், உள் விளையாட்டு
அரங்கங்களை அமைத்தல், ஊக்கத் தொகைகளை வழங்குதல் போன்ற பல்வேறு முனைப்பான
நடவடிக்கைகளை எடுத்து வரும் எனது தலைமையிலான அரசு இருபதாவது ஆசிய தடகளப்
போட்டிகளை சென்னையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திடவும் முடிவு
எடுத்திருந்தது. இலங்கைக்கு எதிராக.. விளையாட்டுக்கு முக்கியத்துவம்
அளிக்கும் அதேசமயத்தில், இலங்கை வாழ் தமிழர்கள் சுயமரியாதையுடனும், சம
உரிமையுடனும், கவுரவத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பதில் எனது தலைமையிலான
அரசு எப்போதும் உறுதியாக உள்ளது.நான் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை
ஏற்றவுடன், இலங்கையில் உச்சக்கட்டப் போர் நடந்தபோது, சர்வதேச போர்
விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, அப்பாவி இலங்கைத் தமிழர்கள் ஈவு
இரக்கமற்ற முறையில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்களை போர்க்
குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு
வலியுறுத்த வேண்டும் என்றும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள்
அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக
கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள்
பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத்
தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு
சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது மட்டுமல்லாமல்,
இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி
அளிக்கக்கூடாது என்றும் வலியுறு ்தி பாரதப் பிரதமருக்கு பல கடிதங்களை நான்
எழுதியுள்ளேன். இதுவன்றி, இலங்கை நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு
வீரர்கள் கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற்று தங்களுடைய திறமையை
வளர்த்துக் கொள்ளும் வகையில் நட்பு ரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ள
கடந்த ஆண்டு தமிழகம் வந்தனர். அப்போது அவர்களுக்கு தமிழகம் வர அனுமதி
அளித்த மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை நான் தெரிவித்ததோடு, இலங்கை
கால்பந்து வீரர்களுக்காக எந்தப் போட்டிகளும் தமிழகத்தில் நடத்தக் கூடாது
என்று நான் உத்தரவிட்டேன். செவிடன் காதில் ஊதிய சங்கு இந்த ஆண்டு தமிழ்நாடு
சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்
மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசுகையில், தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்தினேன். இருப்பினும்,
‘செவிடன் காதில் ஊதிய சங்கு' போல் தமிழர்களின் கோரிக்கைகள் அனைத்தும்
மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பாலச்சந்திரன் படுகொலை இந்தச்
சூழ்நிலையில், பிரபாகரனின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக 12 வயது சிறுவன்
பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுத் தள்ளிய கோரக் காட்சிகள் ஊடகங்களில்
வெளிவந்துள்ளன. இது மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும்.
இது
என்னுடைய மனதை மிகவும் நெகிழ வைத்துள்ளது. இதேபோன்று இன்னும் பல தமிழர்கள்
இலங்கையில் கொல்லப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களும் வெளிவந்துள்ளன. இவற்றை
எல்லாம் பார்க்கும்போது, ஜெர்மனியில் ஹிட்லர் நிகழ்த்திய இனப் படுகொலையை
விஞ்சும் அளவிற்கு இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்று இருப்பது தெரிய
வருகிறது. இலங்கை அரசின் மாபாதகச் செயல்களை, மனிதாபிமானமற்ற செயல்களை, மனித
நேயமற்ற செயல்களை, ஈவு இரக்கமற்ற செயல்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு
சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு செயல் வடிவம்
கொடுக்க வேண்டும்; அமெரிக்கா உட்பட பிற இணக்க நாடுகளுடன் இணைந்து இலங்கை
மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; போர்க் குற்றங்கள்
நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி அவர்களுக்கு தக்க
தண்டனை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 20.2.2013
நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கூறியிருந்தேன். தமிழர்
உணர்வுகள் புண்படும்.. இலங்கை அரசு இலங்கை வாழ் தமிழர்களுக்கு எதிராக
தொடர்ந்து செயல்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, வருகிற ஜூலை மாதம்
சென்னையில் நடைபெறவிருக்கும் இருபதாவது ஆசிய தடகளப் போட்டிகளில் இலங்கை
வீரர்கள் பங்கேற்றால் அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக
அமைந்துவிடும் என்பதால், இலங்கை வீரர்கள் 20வது ஆசியத் தடகளப் போட்டிகளில்
கலந்து கொள்ளக்கூடாது என்றும், இதை இலங்கை அரசுக்கு உரிய முறையில்
தெரிவிக்குமாறும் சிங்கப்பூரிலுள்ள ஆசிய தடகள கழகத்தின் பொதுச்
செயலாளருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளரால் கடிதம் வாயிலாக
தெரிவிக்கப்பட்டது.
இதன் மேல், நடவடிக்கை குறித்து தமிழக அரசுக்கு
தெரிவிக்குமாறும் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன் நகல்கள்
மத்திய அரசின் வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் விளையாட்டுத்துறை
செயலாளருக்கும் அனுப்பப்பட்டன. இருப்பினும், இதுநாள் வரை ஆசிய தடகளக்
கழகத்திடமிருந்து எவ்வித பதிலும், தகவலும் தமிழக அரசிற்கு
கிடைக்கப்பெறவில்லை. ஆசிய தடகளக் கழகத்திடமிருந்து எவ்வித சாதகமான பதிலும்
வராத சூழ்நிலையில், இலங்கை நாடு பங்கேற்கும் ஆசிய தடகளப் போட்டிகளை
தமிழ்நாட்டில் நடத்துவது என்பதை எனது தலைமையிலான அரசு ஒரு போதும்
ஏற்றுக்கொள்ளாது. தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.எனவே, இந்த ஆண்டு
ஜூலை மாதம் நடைபெற உள்ள இருபதாவது ஆசிய தடகளப் போட்டிகள் தமிழக அரசால்
நடத்தப்பட மாட்டாது என்பதையும், இந்தப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது
என்பதால் வேறு எங்கேனும் நடத்திக் கொள்ளுமாறு ஆசிய தடகளக் கழகத்தின்
பொதுச் செயலாளர் தமிழக அரசால் கேட்டுக் கொள்ளப்படுவார் என்பதையும்
தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா அதில் கூறியுள்ளார்.
சர்வதேச
போட்டிகளில் இனவெறி கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்ட
வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அதிரடி
நடவடிக்கை அமைந்திருப்பதாகவே கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...