தமிழகத்திலேயே முதல் முறையாக, கோவை மாவட்டத்திலுள்ள அரசு மாணவர்
விடுதிகளுக்கு யு.பி.எஸ்., மூலமாக, தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, மாநிலம் முழுவதும் செய்தால் பல ஆயிரம் ஏழை
மாணவ, மாணவியர் பொதுத்தேர்வில் சாதிக்க முடியும்.
மற்றவர்களை விட, பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவியரின்
நிலைதான் மிகவும் பரிதாபத்துக்கு உரியதாகவுள்ளது. ஏழை மாணவ, மாணவியர்
மட்டுமின்றி, அரசுக்குச் சொந்தமான விடுதிகளில் தங்கிப் படிப்பவர்களின்
கல்வியும், எதிர்காலமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
அரசு விடுதிகளில் மின்வெட்டால் பூச்சிக்கடி, கொசுத்தொல்லை ஆகிய
காரணங்களால் தூக்கம் இழந்து, உடல்ரீதியாக பாதிக்கப்படுவதுடன், சரியாகப்
படிக்கவும் முடியாமல் மன ரீதியாகவும் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி
வருகின்றனர். தேர்வு நேரத்தில், இவர்களுக்கு ஜெனரேட்டர் வசதியை
ஏற்படுத்தித் தர அரசு அனுமதி அளித்திருந்தாலும், அது எந்தளவுக்கு
நடைமுறைப்படுத்தப்படும் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
இந்நிலையில், மாநிலத்துக்கே முன்னுதாரணமாக, கோவை மாவட்டத்திலுள்ள அரசு
விடுதிகளுக்கு யு.பி.எஸ்., வசதி செய்து கொடுப்பதற்கு சிறப்பு முயற்சி
எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், சிங்காநல்லூர், ரெட்பீல்ட்ஸ், புலியகுளம்,
ரேஸ்கோர்ஸ், பாலசுந்தரம் ரோடு, ஆனைமலை, சொக்கம்பாளையம், லட்சுமி நாயக்கன்
பாளையம், கோட்டூர், பொள்ளாச்சி, வால்பாறை, துடியலூர் என பல்வேறு
இடங்களிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவ,
மாணவியருக்கான 23 விடுதிகள், அரசால் நடத்தப்படுகின்றன.
பள்ளிகளில் படிக்கும் 588 மாணவர்கள், 389 மாணவியர், கல்லூரிகளில்
படிக்கும் 354 மாணவர்கள், 318 மாணவியர், ஐ.டி.ஐ., மாணவர்கள் 90 பேர் என
மொத்தம் 1,739 பேர், இந்த விடுதிகளில் தங்கிப் படித்து வருகின்றனர்.
மின்வெட்டால் தங்களுடைய கல்வி, உடல் நலம், எதிர்காலம் பாதிக்கப்படுவது
குறித்து, கோவை கலெக்டர் கருணாகரனிடம் இந்த மாணவ, மாணவியர் பலரும் நேரில்
முறையிட்டனர்.
இவர்களுக்கு தடையற்ற மின்சாரம் தருவதற்கு உதவும் வகையில், யு.பி.எஸ்.,
பொருத்துவதற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக முயற்சி எடுக்குமாறு,
சம்மந்தப்பட்ட துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மாவட்ட ஆதி திராவிடர்
நலத்துறை அலுவலர் சுரேஷ், முன்னோடி வங்கி உதவியுடன் இதற்கான முயற்சிகளில்
இறங்கினார்; அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
மாவட்டத்திலுள்ள 23 அரசு மாணவர் விடுதிகளுக்கும் யு.பி.எஸ்.,
(இன்வெர்ட்டர்) பொருத்துவதற்கு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் முன்
வந்துள்ளன. அவற்றை ஒருங்கிணைத்து, இதற்கான ஏற்பாடுகளை முன்னோடி வங்கி
செய்து வருகிறது.
அரசு விடுதிகளுக்கு, யு.பி.எஸ்., பொருத்தப்பட்டிருப்பது, தமிழகத்திலேயே
முதன்முறையாகும். இதேபோல, மாநிலம் முழுவதும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மூலமாக அரசு மாணவர்
விடுதிகளுக்கு யு.பி.எஸ்., பொருத்த நடவடிக்கை எடுத்தால், ஏழை மாணவ,
மாணவியரும் இடையூறின்றிப் படித்து, தேர்வில் சாதிக்க முடியும்.
தமிழக
அரசின் ஆதி திராவிடர் நலத்துறை கமிஷனர் சிவசங்கரனிடம் கேட்ட போது, "அரசு
விடுதிகளில் தங்கிப்படிக்கும் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படக் கூடாது
என்பதற்காக தேர்வு காலங்களில் ஜெனரேட்டர் எடுத்துக்கொள்ள அரசு
அனுமதித்துள்ளது.
கோவையைப் போல, மற்ற பகுதிகளில் இத்தகைய உதவி கிடைத்தால், அதைப்
பயன்படுத்திக்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும்
அறிவுறுத்தப்படும்," என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...