பள்ளித் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில்
பொதுத்தேர்வினர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மாணவ, மாணவிகளும் அதிக
மதிப்பெண் பெற எளிய வழிமுறைகளை விளக்குகிறார் கோபாலாபுரம் டி.ஏ.வி.,
பள்ளியின் முன்னாள் முதல்வரும், பாவை பள்ளிக் குழுமத்தின் இயக்குநருமான
சதிஷ்:
மத்திய, மாநில அரசுகள் தங்களது
பள்ளி பாடத்திட்டத்தில் சி.சி.இ., (தொடர் மதிப்பீட்டு முறை) பின்பற்றி
வருவது வரவேற்கத்தக்கது. மாணவர்களின் மன அழுத்தத்தை இம்முறை மாற்றிவிடும்.
ஒவ்வொரு பாடங்களின் பின்புறமும் கொடுக்கப்பட்டுள்ள பாடச்
சுருக்கங்களையும் தெளிவாக புரிந்து படிப்பது அவசியம். அதன் பின்பு கடந்த 5
ஆண்டுகளாக பொது தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள், ஆசிரியர் முக்கியம்
என்று குறிப்பிட்டுள்ள கேள்விகள், அவரவர் மனதிற்கு முக்கியம் என்று படும்
கேள்விகளை எழுதி வைத்து அதற்கான பதில்களை படித்து பலமுறை தனக்கு தானே
சத்தமாக சொல்லி பார்க்கவேண்டும். இவ்வாறு செய்யும் போது கேள்விகளும்,
அதற்கான பதில்களும் மனதில் புரிதலுடன் தெளிவாக பதிந்துவிடுகிறது.
பலமுறை சொல்லி பார்த்த பிறகும் சில கேள்விகளின் பதில்கள் கடினமாக
இருப்பதாய் உணர்வோம். அத்தகைய கேள்விக்கான பதில்களை நாமே சுய தேர்வு நடத்தி
எழுதி பார்க்கவேண்டும். அதில் சிறிய தவறுகள், மறதி என எந்த சிக்கல்
இருந்தாலும் சுய தேர்வை மறுபடியும், மறுபடியும் எழுதி பார்க்கவேண்டும்.
இவ்வாறு செய்தால் எந்த ஒரு மாணவனும் சிறந்த மதிப்பெண்களை பெற முடியும்.
இதற்கென்று பெரிதாக எதுவும் தியாகம் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை.
தேர்வு நேரம் என்பது மிகவும் முக்கியம். இச்சமயத்தில் மாணவர்கள்
பரபரப்பிற்கு ஆளாகின்றனர். தேர்வு சமயங்களில் இரவு 8மணியின் போதே உறங்க
சென்றுவிட வேண்டும். காலையில் எழுந்து எந்த பதட்டம் இன்றி தேர்வு
மையத்திற்கு செல்ல வேண்டும். சரியான துõக்கம் என்பது மிகவும் முக்கியம்.
இது தவிர தேர்வு மையத்திற்கு சென்றதும் சக நண்பர்களுடன் பாடங்கள் பற்றியோ,
முக்கிய கேள்விகள் பற்றியோ, பிற தேவையற்ற விஷயங்களை பேசுவதையும்
தவிர்த்துவிட வேண்டும்.
தேர்வுக்கு தேவையான பேனா, பென்சில், ஹால் டிக்கெட் என அனைத்தும்
முதல்நாள் இரவே தயார்நிலையில் எடுத்துவைப்பதும், தேர்வு மையத்துக்கு
சிறிதுநேரம் முன்பே சென்றுவிடுவதும் கடைசிநேர பதட்டத்தை குறைக்கும். தேர்வு
எழுதும் போது மிகவும் தெளிவாக தெரியும் என்ற கேள்விகளுக்கு முதலில் பதில்
அளிக்கவேண்டும், இரண்டாவதாக ஒரளவு தெளிவாக தெரியும் கேள்விகளுக்கு
பதிலளித்து பின்பு, இறுதியாக குழப்பமான கேள்விகளை எழுத வேண்டும். இது
தேர்வு சமயத்தில் நேர பங்கீட்டிற்கு உதவுவதுடன் நல்ல மதிப்பெண்கள் பெறவும்
உதவும். கொடுக்கப்பட்டுள்ள நேரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். முன்பே
தேர்வை முடித்து இருந்தாலும் விடைத்தாளை முழுவதும் படித்து பார்த்து
தேர்வரிடம் ஒப்படைக்கவேண்டும்.
இவை அனைத்திற்கும் முதன்மையானது உடல் ஆரோக்கியம், 2 மாதங்களுக்கு முன்பு
இருந்தே ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தெருவோர
உணவுகள் உட்பட உடலுக்கு இடையூறு விளைவிக்கும் அனைத்து உணவுகளையும்
தவிர்த்து விடவேண்டும். தேர்வு சமயத்திலும் அனைத்து வேளையும் தவறாது
உணவுடன் கூடிய உறக்கம் அவசியம். அதே சமயம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை
தவிர்த்துவிடவேண்டும். தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டே
படிப்பதால் எந்த பயனும் இல்லை.
அதிக மதிப்பெண் பெறுவது என்பது நல்லது, அதே சமயம் மதிப்பெண்களை மட்டும்
மையப்படுத்தி நமது செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள கூடாது.
மொழிப்புலமை,பேச்சாற்றல், ஒவியம், விளையாட்டு போன்ற தனித்திறமைகளுக்கு
முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...