தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த, போலீஸ் தேர்வில், 12,208 பேர்
தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பயிற்சி, 37 போலீஸ் பயிற்சி
மையங்களில் இன்று துவங்குகிறது.
நேற்று முதல் இந்த, 37 மையங்களிலும், புதிதாக தேர்வானவர்கள், உத்தரவு
நகல்களுடன் வந்து பயிற்சி மையத்தில் இணைந்தனர். ஆயுதப் படையில், 4,284
ஆண்கள், 1,835 பெண்களும், மாவட்ட போலீசில், 6,033 ஆண்கள், 10 பெண்கள் என
மொத்தம், 12, 208 பேர் பயிற்சி மையங்களில் இணைந்துள்ளனர். இன்று முதல்,
அவர்களுக்கான பயிற்சிகள் துவக்கப்படுகின்றன.
நவம்பர் முதல் வாரம் வரை, பயிற்சியளிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு
மையத்திலும், புறநகர் பகுதி எனில் ஆயுதப்படை டி.எஸ்.பி., தலைமையிலும்,
மாநகர பகுதிகளில் ஆயுதப்படை உதவி கமிஷனர், பயிற்சி பள்ளியின் துணை
முதல்வராகவும் செயல்பட உள்ளனர்.
இன்று காலை, பயிற்சி மையங்களில் அவர்களுக்கான எண் ஒதுக்கப்பட்டு,
வகுப்புகள் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மையத்திலும், 50 பேருக்கு ஒரு
வகுப்பு என்ற வகையில், மூன்று முதல், அதிகபட்சமாக 10 வகுப்புகள் வரை
பிரிக்கப்பட்டுள்ளன. ஆயுதப்படை உதவி கமிஷனர் ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் நிரந்தர போலீஸ் பயிற்சி மையங்கள், எட்டு மட்டுமின்றி
கூடுதலாக, 29 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, இன்று முதல், 37 மையங்களிலும்
பயிற்சிகள் துவக்கப்படுகின்றன. இந்த மையங்களில், நேற்று முதல் தேர்வு
செய்யப்பட்டவர்கள் இணைந்துள்ளனர்.
இன்று காலை வருபவர்களும் இணைத்துக் கொள்ளப்படுவர். புதிதாக
சேர்க்கப்பட்டவர்களுக்கு, எட்டு மாத பயிற்சியும், அதன் பின், போலீஸ்
ஸ்டேஷன்களில் ஒரு மாத பயிற்சியும் அளிக்கப்பட்டு, அதன் பின், ஆயுதப்படையில்
பணி வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...