ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் வளர்ச்சி முக்கிய பங்கு
வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக,
ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
எந்த நாகரிகத்துக்கும் முன்னோடி அறிவியல் தான். கற்காலத்திலும் கூட,
வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக் கொள்ள அறிவியலை மனிதர்கள் பயன்படுத்தினர்.
கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினர்; கற்களை கூர்மையாக்கி ஆயுதங்களாக்கினர்.
கம்ப்யூட்டர் முதல் 3ஜி மொபைல் போன், புதிய வாகனங்கள், விவசாயத்தில்
நவீனம், மரபணு மாற்றம், டெஸ்ட் டியூப் குழந்தை, நவீன ராக்கெட்டுகள்,
செயற்கைகோள்கள் வரை, ஒவ்வொரு நாளும் ஒரு கண்டுபிடிப்பு உருவாகிறது.
வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, கல்வி முறையிலும் புதுமையை புகுத்த
வேண்டும். வெளிநாடுகளில் பணிபுரியும் விஞ்ஞானிகளை, மீண்டும் இந்தியாவில்
பணிபுரிய புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆராய்ச்சி படிப்புகளில்
அதிக மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம், வளமான இந்தியாவை உருவாக்கலாம்.
இருளை விரட்டிய மின்விளக்கு; தொலைவில் இருந்தாலும் உரையாட தொலைபேசி;
என்ன வேலைகளையும் செய்வதற்கும் கம்ப்யூட்டர்கள்; மரங்களில் நிழல்களில்
தங்கிய மனிதனுக்கு வானளாவிய கட்டடங்கள்; எங்கு வேண்டுமானாலும் செல்ல
கடலுக்கு நடுவே கூட பாலங்களை அமைத்தது; உடனுக்குடன் பறக்க விமானம்;
வெள்ளத்தில் இருந்த பாதுகாக்க அணைக்கட்டுகள்; மேலே இருந்து தகவல்களை தர
ராக்கெட்டுகள்; அறிவியல் ரீதியாக சந்ததியை கண்டுபிடிக்க மரபணு; இலை தழைகளை
உடுத்திய மனிதன், தற்போது உடுத்தும் பல வண்ண ஆடை; பச்சை காய்கறிகளையும்,
பச்சை மாமிசங்களையும் சாப்பிட்ட மனிதன், தற்போது உண்ண பல வகை உணவு என
எத்தனையோ முன்னேற்றங்களை அடைந்துள்ளான். இதற்கு காரணம் அறிவியல்.
தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாள்,
தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் 1888 நவ., 7ல் திருச்சி
அருகே திருவானைக்காவல் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் சந்திரசேகர் -
பார்வதி அம்மாள்.
பிரசிடென்சி கல்லூரியில் இளநிலை, முதுநிலை இயற்பியல் பட்டப்படிப்பை
முடித்தார். கோல்கட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். அதே
நேரத்தில் "இந்தியன் அசோசியேசன் பார் கல்டிவேஷன் சயின்ஸ்" நிறுவனத்தில்
ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.
ஒருமுறை இவர், கப்பலில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிக்
கொண்டிருந்த போது, "கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது" என யோசித்தார். இதை
அவர் ஆராய்ந்து 1928, பிப்., 28ல், "ராமன் விளைவை" கண்டுபிடித்தார்.
"நீர் மற்றும் காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது,
சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது. அப்போது அதிகமாக சிதறல் அடையும்
நீல நிறம், தண்ணீரில் தோன்றுகிறது" என கண்டுபிடித்தார். இதற்காக 1930ம்
ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...