தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்
பள்ளிகளில், கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பிற
பாட ஆசிரியர்கள் அப்பாடத்தை நடத்தி வருகின்றனர். இதனால், பிளஸ் 2
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின்
கீழ், ஆண்டுதோறும் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்பட்டு வருகின்றன. 2001 முதல் 2012 வரை, தமிழகம் முழுவதும் 1,200
பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இவற்றில், கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள்
நிரப்பப்படாததால், 1,200 பணியிடங்கள் காலியாக உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட
இப்பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியின் மூலமாக, குறைந்த
சம்பளத்திற்கு கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில்,
பிற பாடங்களை எடுக்கும் ஆசிரியர்கள், கணினி அறிவியல் பாட வகுப்புகளை
நடத்துகின்றனர். இதனால், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இப்பாடத்தில்,
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் உள்ளது.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க
மாநில பொது செயலர் விஜயகுமார் கூறியதாவது: கடந்த 8 ஆண்டுகளில் 1,200
பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றில், 2002-10
வரை, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், முதலில் 5 முதுநிலை
ஆசிரியர்களுக்கும், பின்னர் 9 ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்கப்பட்டன.
ஆனால், கணினி அறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கவில்லை.
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், 2008-09ல்,
2,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதிலும், கணினி அறிவியல் ஆசிரியர்கள்
ஒருவர் கூட இல்லை. இப்பாடத்துடன், காலியாக உள்ள பிற பாட ஆசிரியர் காலிப்
பணியிடங்களையும் நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்
கூறினார்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள்
கூறுகையில், "கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் பணி நியமனம் சார்ந்த
வழக்குகள் நிலுவையில் இருப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம். மேலும், இது
சார்ந்த வேறு எந்தவித தகவல்களையும் எங்களால் தெரிவிக்க இயலாது" என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...