"பைக்கா" தேசிய விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு
கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும் சான்று தரப்படாததால்,
கிராமப்புற மாணவர்களிடம், போட்டியில் பங்கேற்கும் ஆர்வம் குறைந்து
வருகிறது.
கிராமப்புற மாணவர்களிடையே, விளையாட்டில் ஆர்வத்தை தூண்டும் வகையில்,
பைக்கா விளையாட்டு போட்டிகள் நடத்த, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு
மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு
ஒன்றிய,மாவட்ட, மாநில அளவில் குத்துசண்டை, கத்தி சண்டை, எடை தூக்குதல்,
வாலிபால், கூடைப்பந்து உள்ளிட்ட, 11 வித போட்டிகள் நடக்கிறது.
மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள், தமிழக அணி சார்பில், தேசிய
போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர். அங்கு, முதல், இரண்டாம் பரிசு,
வெள்ளி பதக்கம் பெறும் மாணவர்களுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
ஆணையம்-பார்ம்-2, சான்று வழங்க வேண்டும்.
முன்னுரிமை கிடைக்கும்: இச்சான்றுகளை பெற்று வரும்
மாணவ, மாணவிகள் பிளஸ் 2க்கு பின், இன்ஜினியரிங், மருத்துவ படிப்பில் சேர,
முன்னுரிமை கிடைக்கும். இது தவிர, மத்திய, மாநில அரசு நிறுவன
வேலைவாய்ப்புகளிலும், முன்னுரிமை தரப்படும். இதன் காரணமாக, கடந்த சில
ஆண்டுகளாக, பைக்கா தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மாணவ,
மாணவியரிடையே ஆர்வம் அதிகரித்தது. சில ஆண்டுகளாக,தேசிய போட்டிகளில் வெற்றி
பெறும் மாணவ, மாணவியருக்கு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்,
வழங்கப்படும்-பார்ம்-2, சான்றுகள் வழங்குவதில்லை.
பள்ளிகள் மூலம் மாணவர்கள், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு
விண்ணப்பித்து, பல ஆண்டுகளாகியும், சான்று கிடைக்காமல் பலர்
காத்திருக்கின்றனர். இதனால், நாளுக்கு நாள், பைக்கா விளையாட்டு போட்டிகளில்
பங்கேற்க, கிராமப்புற மாணவர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது.
சான்று பெறுவதில் சிக்கல் ஏன்?: விளையாட்டு மேம்பாட்டு
ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேசிய போட்டிகளில் வெற்றிபெறும்
மாணவர்களுக்கு, பங்களிப்பு சான்று உடனே வழங்குவோம். அந்த சான்று எண்ணை
குறிப்பிட்டு, எந்ததேதியில், என்ன விளையாட்டிற்காக, என்ன பரிசு கிடைத்தது
என, குறிப்பிட்டு, மாணவர்களின் விலாசத்துடன் எழுதி, பள்ளி தலைமை ஆசிரியர்,
முதல்வர் ஒப்புதலுடன், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு அனுப்ப
வேண்டும்.
அங்கிருந்து, தேசிய ஒலிம்பிக் ஆணையத்திற்கு அனுப்புவோம்.
அங்கிருந்து-பார்ம்-2, சான்றுகள் வழங்கப்படும். ஆனால், பெரும்பாலான
பள்ளிகளில், இவற்றை முறையாக கடைபிடிக்காததால், இச்சான்று பெறுவதில் சிக்கல்
ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...