மகாராஷ்டிரா மாநிலத்தில், புனே அருகே, ஒரு துவக்க பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரை,ஆசிரியர்களுக்கு டீ போட்டு தருவது, சாப்பாடு பரிமாற வைப்பது, பாத்திரங்களை கழுவுதல் என, அன்றாட வேலைகளை, ஆசிரியர்கள் செய்ய வைக்கின்றனர். இந்த கொடுமைகளை வெளிச்சம் போட்டு காட்டிய, மனசாட்சியுள்ள ஆசிரியை, சக ஆசிரியர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
தலைமை ஆசிரியர் மற்றும் ஏழு ஆசிரியர்கள், வேலை பார்க்கின்றனர். மேலும், குழந்தைகளுக்கு சத்துணவு தயாரிக்கவும், உணவு பரிமாறவும், பெண் ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இங்குள்ள ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு படிப்பு செல்லி கொடுப்பதில், அதிக அக்கறை எடுத்து கொள்வதில்லை.
மாறாக, பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வது, கழிப்பறை கழுவ வைப்பது, ஆசிரியர்களுக்கு டீ போட்டு கொடுப்பது, பெரிய பாத்திரங்களில் மதிய உணவை தூக்கி வரச்செய்வது, அதை பரிமாற செய்வது என, அனைத்து வேலைகளையும், மாணவர்களைச் செய்யச் சொல்வதை, வழக்கமாகக் கொண்டு இருந்தனர்.
ஏழைக் குழந்தைகள் என்பதால், யாரும் புகார் செய்யவில்லை. நீண்ட நாட்களாக நடந்து வந்த கொடுமை, இப்பள்ளிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியை சுலோசனா பட்குல்கர், 49, மூலம், வெளிச்சத்துக்கு வந்தது. இதற்காக, தலைமை ஆசிரியர் மற்றும் ஊழியர்கள், சுலோசனாவை, அடித்து தாக்கி உள்ளனர்.
அந்த பள்ளியில் நடந்த அவலம் குறித்து, ஆசிரியை சுலோசனா கூறியதாவது: பிசோலியில் உள்ள பள்ளிக்கு நான், கடந்தாண்டு ஜூலை மாதம் மாறுதலாகி வந்தேன். அன்றிலிருந்து, இன்று வரை, எந்த வகுப்பில் பாடம் நடத்துவது என்று பணி ஒதுக்கப்படவில்லை. நான் பள்ளிக்கு சென்ற நாளிலிருந்து, அங்கு பார்த்த காட்சிகள்,கவலையளித்தன.
மாணவ,மாணவியர், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதை பார்த்து, கண் கலங்கினேன். முதல்வர் மற்றும் ஏழு ஆசிரியர்கள் இருந்தும், அவர்கள் யாரும், பாடம் சொல்லிக் கொடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு பதிலாக, மாணவ, மாணவியரை மோசமாக நடத்துவதிலும், வேலை வாங்குவதிலும்அதிகாரம் செலுத்தினர்.
இங்கு நடக்கும் கொடுமைகளை, கடந்த ஒரு மாதமாக, மொபைல் போனில் படம் பிடித்து வைத்தேன். பள்ளிக்கூடத்தில் இருந்து, அரை கி.மீ., தூரத்தில் உள்ள வீட்டில் இருந்து, மதிய உணவு பாத்திரங்களை, தலையில் வைத்து எடுத்து வருவதும், பின், பாத்திரங்களை கழுவி எடுத்துச் செல்வதற்கும், மாணவர்களை பயன்படுத்துகின்றனர். இந்த காட்சிகளை என் மொபைல் போனில் படம்பிடித்தேன்.
மாவட்ட கவுன்சில் சார்பில்நடத்தப்படும் பள்ளிகளில், இந்த நிலைமை நீடிக்கிறது. மேலும், மதிய உணவு பரிமாறுவதை, சுழற்சி முறையில் மாணவ, மாணவியர் செய்ய வேண்டும். இதற்காக நியமிக்கப்பட்ட பெண் ஊழியர், வேடிக்கை பார்த்தபடி இருப்பார். மற்றொரு கொடுமை, மாணவியர், ஆசிரியர்களுக்கு, ஒரு நாளில் நான்கு முறை, டீ போட்டு தர வேண்டும். இதற்காக, ஸ்டவ் ஒன்று வாங்கியுள்ளனர். வகுப்பறைகளை சுத்தம் செய்வதும், மாணவ, மாணவியர் தான்.
இந்த காட்சிகளை, தினந்தோறும் பார்த்து வெறுப்படைந்த நான், பள்ளி தலைமை ஆசிரியரை பார்த்து, "மாணவர்கள் என்றால், படிப்பதும், விளையாடுவதும் தான்; இப்படி மனிதாபிமானமின்றி நடத்தலாமா?" என கேட்டேன். அதற்கு அவர், "வாயை மூடுங்கள்" என, திட்டினார். இவர், கடந்த, 28 ஆண்டுகளாக, இந்த பள்ளியில் பணியாற்றுகிறார்.
கடந்த, 5ம் தேதி, நான் பள்ளிக்கு வந்தேன். நான் இருந்த வகுப்பறைக்குள் வந்து, தலைமை ஆசிரியரும், இரண்டு ஆசிரியர்களும் என்னை தாக்கினர். இதில், எனக்கு கழுத்திலும், தலையிலும் காயம் ஏற்பட்டது; முகத்தில் கீறல்கள் விழுந்தன.புகைப்படம் எடுப்பதற்கு எச்சரிக்கை செய்தனர்.
மேலும், என் பையில் ஆதாரங்கள் இருக்கிறதா என்று தேடினர். நான்காம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின், பெற்றோரை வரவழைத்து, நான் மாணவ, மாணவியரை அடிப்பதாக புகார் செய்தனர்.
விசாரணைக்கு உத்தரவு: இதனால், கோபமுற்ற பெற்றோர், என்னை ஆத்திரத்தில் திட்டினர். அவர்களிடம், பள்ளியில் நடக்கும் கொடுமைகளை கூறி, "இதற்காக, விஷயத்தை திசை திருப்பியுள்ளனர்" என்றேன். அதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். இவ்வாறு, ஆசிரியை சுலோசனா கண்ணீர் மல்க கூறினார்.
இந்த பள்ளியில் நடக்கும் அவலம் குறித்து, புனே மாவட்ட கல்வி அதிகாரி கவனத்துக்கு, கொண்டு செல்லப்பட்டுள்ளது. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...