பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆங்கிலத் தேர்வுகள்
விடுமுறையின்றி வருகின்றன. எனவே ஆங்கிலம் இரண்டாம் தாளை, ஒருநாள் இடைவெளி
விட்டு நடத்த வேண்டும் என ஆசிரியர், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிளஸ் 2 தேர்வில், தமிழ் முதல் தாளுக்கும், இரண்டாம் தாளுக்கும் இடையே இரண்டு நாட்கள் விடுமுறை உள்ளது. ஆனால், ஆங்கில பாடத்திற்கான இரண்டு தாள்களும், மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில், அடுத்தடுத்து நடக்கிறது. அதேபோல், 10ம் வகுப்பு ஆங்கில பாடத்தின் இரண்டு தாள்களும், ஏப்ரல் 1 மற்றும், 2ம் தேதிகளில், தொடர்ச்சியாக நடக்கிறது.
இதுகுறித்து, ஆங்கில ஆசிரியர்கள் கூறியதாவது: மின்வெட்டு பிரச்னையால், மாணவர்களுக்கு, பகலில் படிப்பது மட்டுமே, ஒரே வழியாக உள்ளது. பகல் நேரத்தில் பள்ளிக்குச் செல்வது, டியூஷன் செல்வது, அன்றாட வேலைகள் என, நேரம் போய் விடுகிறது. அடுத்தடுத்த நாட்களில் தேர்வு இருந்தால், முந்தைய இரவில் படிப்பதோ, பாடங்களை திருப்புவதோ சாத்தியமில்லை.
குறிப்பாக, கிராமப்புறங்களில் தமிழ்வழி கற்கும் மாணவர்கள், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவதே பெரும் பிரயத்தனமாகவே உள்ளது. அத்துடன், பெரும்பாலான கிராமப்புறப் பள்ளிகளில் தேர்வு மையங்கள் இல்லை. அருகில் உள்ள பெரிய ஊர் அல்லது நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதி, திரும்ப வேண்டும்.
தேர்வு மையத்திலிருந்து, பஸ் பிடித்து, வீடு திரும்ப மாலை நேரமாகி விடும். அதன் பின், தொடர் மின் வெட்டு இருப்பதால், படிப்பதில் சிக்கல் ஏற்படும். இதனால், ஆங்கிலம் இரண்டாம் தாள்களில் மதிப்பெண் குறைய வாய்ப்பு அதிகம். எனவே, கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆங்கில தேர்வுகளை, ஒரு நாள் இடைவெளி விட்டு நடத்த வேண்டும். இவ்வாறு, ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதே கருத்தை, மாணவர்களும் வலியுறுத்துகின்றனர். ஆனால், அட்டவணையில் திருத்தம் செய்ய வாய்ப்புகள் இல்லை என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...