Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒரு லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதி

          குறைந்தபட்ச இடவசதி இல்லாதது போன்ற காரணங்களால் அங்கீகாரம் இல்லாமல் உள்ள 1,000 தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 10, +2ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

        இதனால் பொதுத்தேர்வு எழுதும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் பலன் அடைவார்கள் என்று தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கும்பகோணம் பள்ளி தீ விபத்தைத் தொடர்ந்து பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடம் தொடர்பாக அரசாணை எண் 48-ஐ தமிழக அரசு பிறப்பித்தது.

         அரசாணையின்படி, மாநகராட்சிகளில் பள்ளிகளுக்கு 6 கிரவுண்ட் நிலமும், நகராட்சிகளில் 8 கிரவுண்ட் நிலமும், மாவட்டத் தலைநகரங்களில் 10 கிரவுண்ட் நிலமும், பேரூராட்சிகளில் 1 ஏக்கர் நிலமும், கிராமங்களில் 3 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

        போதிய இடவசதி இல்லாமல் உள்ள பள்ளிகளுக்கு குறைந்தபட்ச இட நிபந்தனையைப் பூர்த்தி செய்ய கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, கடந்த ஆண்டு மே மாதத்தில் இந்தப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் 31.05.2012-ம் தேதியோடு முடிவடைந்தது.

         குறைந்தபட்ச இடவசதி இல்லாத சுமார் 1,000 பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம், பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறை ஆகிய துறைகளின் சார்பில் நோட்டீஸýம் அனுப்பப்பட்டது. இதில் 143 பள்ளிகளைத் தவிர மீதமுள்ள பள்ளிகள் இந்த குறைந்தபட்ச இட நிபந்தனையைப் பூர்த்திசெய்யவில்லை என்பது தெரியவந்தது.

          பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், பொதுத்தேர்வுகள் நெருங்குவதையடுத்து இந்தப் பள்ளிகளின் மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் கடிதமும் அனுப்பியுள்ளது. அந்தக் கடித விவரம்:

          அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகள் இடவசதி தொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில், தங்களது பள்ளிகளுக்கு அருகில் காலியிடம் இல்லை என்றும், மாநகராட்சிகள், நகராட்சிகளில் இடத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் பதிலளித்திருந்தன. பல பள்ளிகள் மற்றொரு இடத்தில் நிலத்தை வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளன. போதிய இடவசதி இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக அரசு கொள்கை அளவிலான முடிவு எடுக்க வேண்டியுள்ளது.

          எனவே, இந்த தனியார் பள்ளிகளில் 10,12-ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பெயர்ப் பட்டியலை மண்டல அரசுத் தேர்வுகள் துணை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த மாணவர்களின் விவரங்களையும் சேகரித்து அவர்களைப் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

           சென்னையில் 173 பள்ளிகள்:  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 380 பள்ளிகளுக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தால் அங்கீகாரம் வழங்கப்படாமல் உள்ளது. சென்னை மாவட்டத்தில் மட்டும் 173 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. வரும் மார்ச் மாதம் முதல் இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருகிறது. இந்தச் சட்டத்தின்படி, அனைத்துப் பள்ளிகளுக்கும் அங்கீகாரம் இருக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதமும், அதன் பிறகு நாளொன்றுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

         தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் சங்கப் பொதுச்செயலாளர் கே.ஆர். நந்தகுமார் இதுதொடர்பாக கூறியது:
          
          இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக அரசாணைக்கு முன்பிருந்த பழைய பள்ளிகளுக்கு குறைந்தபட்ச நிலத்தை வலியுறுத்தக் கூடாது. புதிதாகத் தொடங்கப்படும் பள்ளிகளுக்கு மட்டுமே இதை வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால், குறைந்தபட்ச நில அளவைக் குறைக்க வேண்டும். தனியார் பள்ளிகளைப் போல் பல அரசுப் பள்ளிகளிலும் குறைந்தபட்ச நிலம் இல்லை. அந்தப் பள்ளிகளுக்கும் இதை அமல்படுத்த வேண்டும் என்றார் அவர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive