ஐ.ஐ.டி., அகில இந்திய மருத்துவக் கழகம் போன்றவற்றிற்கு மட்டும்
நடத்தும் பொது நுழைவுத்தேர்வு நடத்தலாமென்றும், மாநில அளவில்
நுழைவுத்தேர்வு தேவையில்லையென்றும் மேல்நிலைப் பொதுத்தேர்வு மதிப்பெண்
அடிப்படையில், தொழிற்படிப்பு சேர்க்கை செய்யலாமென்றும் அகில இந்திய
தொழிற்கல்விக் கழகத்தின் செயலாளர் அனுராதா குப்தா கூறியிருப்பது
வரவேற்கத்தக்கது.
தற்பொழுது மாணவர் எதிர்கொள்ளும் மனஅழுத்தம்
அளவிடற்கரியது. படிப்பு, படிப்பு, என்றும் தேர்வு, தேர்வு என்றும் அவர்கள்
வாழ்க்கை கழிகிறது. நுழைவுத்தேர்வை எதிர்கொள்ளப் பயிற்சி வகுப்புகள், ஆயத்த
வழிகாட்டிகள், மாதிரித்தேர்வுகள் முதலியன தமிழ்நாட்டில் பல கோடி வணிகமாகப்
பெருகி உள்ளது. பிற மாநிலங்களிலும் இதே நிலைதான். காலை 5மணிக்கு எழுந்து
தனிப்பயிற்சி வகுப்புகள் ஒன்று மாறி மற்றொன்று என இரண்டு மூன்று
இடங்களுக்குச் சென்று களைத்துப் பள்ளி வரும் மாணவர் வகுப்பில் கந்திறந்தும்
மனம் உறங்கிய நிலையில் வகுப்புப் பாடத்தில் கவனம் செலுத்த இயலாத நிலையில்
உள்ளனர். வசதியற்ற ஏழை மாணவர்க்கு எவ்வித தனிப்பயிற்சியும் கிடையாது. தமது
சொந்த முயற்சியிலேயே மற்றவரோடு போட்டி போடுவது ஒரு போராட்டமே!
மாணவரது ஆர்வம், தனித்திறன்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படாது
பெற்றோர் விருப்பம் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. மாணவர்கள் தமது
திறன்களையும், ஆசைகளையும் வளர்க்க இயலாமல் போவதோடு தாம் சேர்ந்த
படிப்பிற்கு ஆற்றலாலும், மனப்பான்மையாலும் அன்னியமாக இருப்பதால்
மனச்சோர்வுக்கு உட்படுகின்றனர். பல சமயங்களில் தற்கொலை வரை செல்கின்றனர்.
ஐந்து வருடப் படிப்பை ஏழு ஆண்டானாலும் முடிக்க இயலாமல் திணறுகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்னர், ஒருவர் என்னைச் சந்தித்து எனது பேத்தி
எல்.கே.ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் பள்ளியில் முதல் மாணவியாக
விளங்கினார். தகுதி அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால்
முதலாண்டுத் தேர்விலேயே தோல்வி அடைந்துள்ளார். அவரது பெற்றோர்கள் இருவரும்
மருத்துவத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்கள். ஏதேனும் தவறு
நேர்ந்துவிட்டதா என்று விசாரித்துச் சொல்லுங்கள் என்று கூறினார். அவர்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் பயின்றவர். உங்கள் பேத்தி தேர்ச்சி
பெறாதது வியப்பில்லை. கிண்டர்கார்டன் முதல் மேல்நிலை வகுப்பு வரை
புத்தகத்திலுள்ள விடையை மனப்பாடம் செய்தே தேறி வந்திருக்கிறார்.
ஆசிரியருடைய மேற்பார்வையிலும் பெற்றோருடைய கவனிப்பிலும் இதுவரை
இருந்துள்ளார். மருத்துவக் கல்லூரியில் தானாகவே படித்துப் புரிந்து கொள்ள
வேண்டும். நூலகத்திற்குச் சென்று படிக்க வேண்டும். பிற மாணவர்களோடு
கலந்துரையாடிப் பாடங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய திறன்கள்
பள்ளிக்கல்வியில் வளர்க்கப்படுவதில்லை. இனி உங்கள் பேத்தி தன் முயற்சியில்
முன்னேற வேண்டும் என்று அறிந்து தேவைப்படும் திறன்களை தாமாகவே வளர்த்துக்
கொள்வார் என்று கூறினேன். எனது சமாதானம் அவரைத் திருப்திப்
படுத்தியிருக்காது.
மனசக்தி ஒன்றையே கற்றலிற்கு அடிப்படையாகக் கொண்டு, பாடநூல்களில்
உள்ள வினாக்களுக்கு, பாடநூலில் உள்ள விடைகளையே மனப்பாடம் செய்து
ஒப்புவித்தல் முறையே கிண்டர்கார்டன் முதல் மேல்நிலை வகுப்பு வரை
பின்பற்றப்படுகிறது. பாடத்திட்டத்தைச் சார்ந்து இருந்தாலும் பாடநூலில்
இல்லாத வினாக்களைக் கேட்கக்கூடாது என ஆசிரியர்களும், பெற்றோர்களும்
வலியுறுத்தியதன் விளைவே இது. சி.பி.எஸ்.ஈ பாடத்திற்கு என்.சி.ஈ.ஆர்.டி
தயாரிக்கும் சீரிய பாடநூல்களைத் தவிர பல தனியார் வெளியீடுகளும் உள்ளன.
ஆனால் தமிழ்நாட்டில் அரசுப்பாடநூல் நிறுவனம் வெளியிடும் ஒரே பாடநூல்தான்
கற்றலிற்கும் வினாத்தாள் தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. பாடநூலில்
காணப்படாத விடையினை, அது முற்றிலும் சரியாகவும், பாடநூல் விடையை விட
சிறப்பாக இருந்தாலும், விடைத்தாள் திருத்துவோர் மாதிரி விடைப்பட்டியலில்
இல்லாத விடை என்று மதிப்பெண் அளிக்காமல் இருப்பது சர்வசாதாரணமான நிகழ்வு
ஆகும். ஆண்டு முழுவதிற்கும் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை டிசம்பர்
மாதத்திற்குள் முடித்துவிட்டு மீதி நாள்களைத் திருப்புத்தாள்களுக்குப்
பயன்படுத்த வேண்டுமென்கிற கல்வித்துறையின் ஆணை கற்பித்தல் வெகுவேகம்,
கற்பது வெகு குறைவு என்ற நிலைக்குத் தள்ளிவிட்டது. ஆசிரியர்க்கு வகுப்பறைச்
சுதந்திரம் அளித்து முழுமையாகக் கற்றல் நடைபெற, கெளரவம் பார்க்காது
இம்முறையை மாற்ற வேண்டியது அவசியம். வயது, கற்கும் திறன், பாடஅளவு
ஆகியவற்றிற்கேற்ற மதிப்பிடல் முறை அமைய வேண்டும். மற்றவரை விஞ்ச வேண்டும்
என்ற அடிப்படையில் போட்டி முறைக் கற்றலிலேயே தொடக்கக் கல்வியிலிருந்து
மாணவரை ஈடுபடச் செய்வதால், பிற மாணவரோடு கலந்துரையாடி ஆழமாகக் கற்கவும்,
ஐயங்களைப் போக்கிக்கொள்ளவும் அறியாது பிஞ்சுகள் வளர்கின்றன. தம்மைவிட அதிக
மதிப்பெண் பெற்ற மாணவரைக் கண்டு வியக்காது பொறாமைத் தீ கொந்தளிக்க அவரைத்
தமது பகைவராகக் கருதும் நிலையையே காண்கிறோம்.
தேர்வையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதால், கல்வியின் உன்னத நோக்கங்கள்
துறக்கப்படுகின்றன. உலகைப் பற்றிய அறிவும், வாழும் திறன்களும், சமூகத்தில்
ஒரு நல்ல உறுப்பினராக இருக்கத் தேவையான கூடி வாழும் திறனும்
வளர்க்கப்படுவதில்லை. சிந்திக்கும் திறன், வினா எழுப்பும் ஆற்றல்,
விசாரித்தறிதல் போன்றவை வளர்ந்திட வகுப்பறை முறைகள் உதவுவதில்லை.
பகுத்தாய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல், பிரச்சினைகளை உணர்ச்சிப்பூர்வமாக
அல்லாது அறிவார்ந்த நிலையில் அணுகும் திறனும் இல்லாது மாணவர்கள்
கற்கின்றனர். மனிதநேயம், நல்ல பழக்கவழக்கங்கள், நிறைமனப்பான்மைகள்
வளர்க்கப்பட, பள்ளி நடைமுறைகள் உதவுவதில்லை. தாமாகக் கற்கும் ஆற்றல் பெறாத
காரணத்தால் வளர்ந்துவரும் தொழில்நுடச் சமுதாயத்தில் அறிவாலும் ஆற்றலாலும்
தம்மைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள அறியாதவராக மாணவர்கள் உள்ளனர்.
மேலும் மாணவரிடம் உள்ள பன்முகத்திறன்கள் பற்றி கவலைப்படாது, நுண்கலை, இசை,
விளையாட்டு, இலக்கியம் போன்றவற்றில் திறனுள்ள மாணவர் அவற்றை வளர்த்துக்
கொள்ள பள்ளிகள் பெரும்பாலும் தவறுகின்றன. ஓய்வு நேரத்தைச் சமுதாயத்திற்குப்
பயனுள்ள வகையில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதும் பள்ளிகளில்
கற்பிக்கப்படுவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, தமது கைகளையும், உடல்
உழைப்பையும் கொண்டு படைப்புச் செயலில் ஈடுபடுத்திக் கொள்ள இயலாது மாணவர்
உள்ள இக்கல்வி முறையை முழுவதும் மாற்றியமைக்க வேண்டும்.
கடந்த 20ஆண்டுகளில் பள்ளிக் கல்வி முறையில் ஏற்பட்டுள்ள சீரழிவே
இதற்குக் காரணம். 1980களில் இவான் இலிச், ரைமர், பாலேப்ரையர், ஜான்ஹோல்ட்
போன்ற பெருங்கல்வியாளர்கள் பள்ளிகள் கல்வி அளிக்க முற்படாது. வர்த்தக
நிறுவனங்களைப் போல் இயங்கி வருகின்றன என்று கூறி, பள்ளியத்தினின்று
பள்ளிகளை விடுவிக்க வேண்டுமென்று வற்புறுத்தியது நினைவில் கொள்ளத்தக்கது.
இன்று நமது பள்ளிகளை இப்பள்ளி முறையே கைப்பற்றி உள்ளது. இவற்றை அலசி,
தேர்வுமுறைகளில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்தக் கல்வி முறையில் முழுமையான
மாற்றங்கள் கொண்டு வர வேண்டியது அவசியம். அங்கொன்றும் இங்கொன்றும்
செய்யப்படும் மாற்றங்கள் பயந்தராது. கிளிப்பிள்ளையாக நமது இளைஞர்களை
உருவாக்காது, சிந்தித்து செயலாற்ற மனித நேயமிக்க நல்ல குடிமக்களாக விளங்கிட
கல்விப்புரட்சி ஒன்று ஏற்பட வேண்டும். அப்பொழுதுதான் நமது பள்ளிகள்
கல்விக்கூடங்களாக விளங்கும். ஒவ்வொரு குடிமகனும் தம் சிந்தனையை இப்பணியில்
ஈடுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். - -எஸ்.எஸ்.இராஜகோபாலன்
நன்றி : தினமணி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...