அணு ஆற்றல் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் ஆகியவைத் தொடர்பான சிக்கல்களுக்கு, ஆக்கப்பூர்வமான விவாதம் மற்றும் பகுப்பாய்வு மூலமே தீர்வுகாண வேண்டும். நம்பிக்கை மற்றும் பயத்தினால் அல்ல என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெறும் 100வது தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், இதை தெரிவித்தார். அவர் பேசியதாவது: வேற்று கிரகங்களுக்கான மனித ஆய்வுகள் உள்ளிட்ட மேற்கண்ட சிக்கல் வாய்ந்த அம்சங்கள், அறிவியல் ரீதியிலான புரிந்துணர்வின் மூலமே அணுகப்பட வேண்டியது மிகவும் அவசியம்.
பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமின்றி, வீடுகள், பணிபுரியும் இடங்கள் மற்றும் சமூகம் ஆகிய அனைத்திலும், மக்களிடம், அறிவியல் சிந்தனைகள் வளர்க்கப்பட வேண்டும். இதற்கான முதலீடுகளும் அதிகப்படுத்தப்பட வேண்டும். விவசாய உற்பத்தி, ஆற்றல் பாதுகாப்பு, சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர் போன்ற துறைகளில் குறைந்த செலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, அறிவியலாளர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஒன்றுக்கொன்று தொடர்புடைய வகையிலான துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கூட்டு மனித முயற்சிகள் மிகவும் அவசியமானவை. தனியார் ஆய்வகங்களில் நடைபெறும் ஆய்வுகள், அரசு உதவியில் நடைபெறும் ஆய்வுகளுக்கு துணைசெய்ய வேண்டும். ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க, விஞ்ஞானிகள், முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
விஞ்ஞான சமூகமானது, மிகப் பெரியளவிலான அமைப்புகளுடன் மட்டும் தொடர்பு கொள்ளாமல், வளர்ந்து வரும் சிறிய ஆராய்ச்சி அம்சங்களுடனும் தொடர்பு கொண்டு, இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இம்மாநாட்டில், வரும் 2020ம் ஆண்டு வாக்கில், உலகின் முதல் 5 பெரிய அறிவியல் சக்திகளுள் ஒன்றாக இந்தியா இடம்பெறுவதை நோக்கமாகக் கொண்ட "அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க கொள்கை"யை மன்மோகன் சிங் வெளியிட்டார்.
இம்மாநாட்டில், மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது: அறிவியல் துறையில், இந்தியா நோபல் பரிசு பெற்று நெடுங்காலமாகி விட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசை, சி.வி.ராமன் பெற்று, 83 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அந்த இலக்கை அடைய, இந்திய அறிவியல் சமூகமானது, தங்களின் முயற்சிகளை அதிகப்படுத்தி, சவால்களை முறியடிக்க வேண்டும். மேலும், இந்த இலக்கை அடைய, ஒரு குறிப்பிட்ட கால அளவையும் வகுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...