"மைக்ரோசாப் நிறுவனம், இந்தியாவில் உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து கல்வித்திறன், பயிற்சியை மேம்படுத்த உள்ளது,''என, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணைத்தலைவர் ரிச்சர்ட் ரஷீத் கூறினார்.
கோவையில், "டெக்விஸ்டா' என்ற மாணவர்களுக்கான கம்ப்யூட்டர் சயின்ஸ் வழிகாட்டுதல் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பின், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணைத்தலைவர் ரிச்சர்ட் ரஷித் மற்றும் மைக்ரோசாப்ட் ரிசர்ச் இன்டியாவின் நிர்வாக இயக்குனர் ஆனந்தன் ஆகியோர் கூறியதாவது: இந்தியா முழுவதிலும் உள்ள முன்னணி கணினி அறிவியல் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுடன் மாணவர்களை இணைக்க "ரிசர்ச் கனெக்டர்' என்ற பெயரில் இணையத்தளம் துவக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் அறிவியல் கல்வி அளித்து வரும் ஏசிஎம் நிறுவனத்துடன் இணைந்து, இதை துவக்கியுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள கம்ப்யூட்டர் துறைஆராய்ச்சியாளர் சமூகத்தையும், இன்ஜினியரிங் மற்றும் பல்வேறு துறைகளில் பயின்ற இந்திய மாணவர் ஒரே கூரையில் இணைக்க மைக்ரோசாப்ட் இன்டியா முயற்சி மேற்கொண்டுள்ளது.
முன்னணி கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மட்டுமின்றி, சர்வதேச அளவில் உள்ள பிரச்னைகளுக்கான தீர்வு காணும் திறமையை பயன்படுத்திக்கொள்ள நேரடி வாய்ப்பையும் பெறுவர். மாணவர்கள், ஆராய்ச்சியில் ஈடுபடவும், அவரவர் ஈடுபட்டுள்ள துறையில் அனுபவம் பெறவும் ரிசர்ச் கனெக்டர் ஒரு இணைப்பு பாலமாக செயல்படும். ரிசர்ச் கனெக்டரின் முக்கிய பணியே, மாணவர்கள் நேரடியான புரஜெக்ட்டுகளில் பணியாற்ற வாய்ப்பளிப்பதாகும்.
இப்பணியை, இதில் பங்கேற்கும் நிறுவனங்கள், மாணவர்களின் திறமையை சோதித்து, அளிக்கும். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்று விவாதிக்கும் ஒரு இணைய தளமாக இது திகழும். கம்ப்யூட்டர் சயின்சில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், முக்கிய கட்டுரைகள், மாணவர்கள் ஆராய்ச்சியில் தங்களை மேம்படுத்திக் கொள்ள தேவையான கல்வி போன்றவை இதில் இடம் பெறும். கம்ப்யூட்டர் சயின்ஸ் அறிவியல் துறையில், இளநிலை முதுநிலை பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதை ஒப்பிடுகையில், பி.எச்டி ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே.
இந்த குறைபாட்டை களைய, ஆசிரியர்களை தரவும், களஞ்சியங்களையும், அனுபவத்தையும் அளிக்கவும், உயர் கல்வி பெற தூண்டுதலாக இருக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த இணைய தளம் உதவும். கடந்த ஏழு ஆண்டுகளில், ஆராய்ச்சியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 25லிருந்து 135 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தரமான கல்வியை அளிக்கவே, மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்தியாவில் தனது முதலீடுகளை மேற்கொள்ளவிருக்கிறது. இந்த முதலீட்டின் அளவும் எதிர்காலத்தில் அதிகரிக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...