காலை நேரங்களில் பஸ்களில் ஏற்படும் கூட்ட
நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தற்போதுள்ள நேரத்தை மாற்றி பள்ளிகள் காலை
7.30 மணிக்கும், கல்லூரிகள் காலை 8 மணிக்கும் தொடங்கும் வகையில் நடவடிக்கை
எடுக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளிடம் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.இந்த
நேர மாற்றம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்றதா என்பது குறித்து பல்வேறு
தரப்பினரின் கருத்துகள் இதோ...
எஸ்.எஸ்.ராஜகோபாலன் (கல்வியாளர்): காலை 7.30
மணிக்கே பள்ளிகள் தொடங்கிவிடும் என்றால், தாய்மார்களுக்கு அது மிகப் பெரிய
கஷ்டமாகிவிடும். காலை 6.30 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டால்தான்
மாணவர்கள் 7.30 மணிக்குள் பள்ளிக்குச் செல்ல முடியும். அதனால் தாய்மார்கள்
அதிகாலை 5 மணிக்கே சமையலை ஆரம்பிக்க வேண்டும்.
காலையில் எழுந்து மாணவர்கள் காலைக் கடன்களை
முடிக்கவேண்டும். காலை உணவு சாப்பிட வேண்டும். இவையெல்லாவற்றையும் விரைவில்
முடிக்க வேண்டியிருக்கும். இதனால் உடல்நலனில் அக்கறை செலுத்த முடியாமல்
போகலாம். மிகவும் நேரத்திலேயே காலை உணவு சாப்பிட்டு விடுவதால், காலை 10.30
மணிக்கெல்லாம் பசியெடுக்க ஆரம்பித்துவிடும். இதுபோன்ற சிக்கல்கள் உள்ளன.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு, அருகமைப்
பள்ளிகள்தான் (Neighbourhood School). மாணவர்களின் பயண நேரத்தைக்
குறைக்கவும், பயணத்துக்கு ஆகும் நேரத்தை படிப்பதற்குச் செலவிடவும் அருகமைப்
பள்ளி முறையை அமல்படுத்தவேண்டும். இதனால் விபத்துகள் ஏற்படாது,
போக்குவரத்துச் சாதனங்களால் சுற்றுச்சூழல் பாதிக்காது. எங்கோ ஓரிடத்தில்
விபத்து ஏற்பட்டது என்பதைக் காரணம் காட்டி ஒட்டுமொத்தப் பள்ளிகளிலும் பள்ளி
நேரத்தை மாற்றுவது சரியான நடவடிக்கையல்ல.
அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தினால்,
அருகமைப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர் முன்வருவார்கள். பஸ்
படிக்கட்டில் தொங்கிக்கொண்டு செல்லும் மாணவர்கள் ஜாலிக்காகச் செல்வதில்லை.
குறித்த நேரத்துக்குள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவே அப்படிச்
செல்கிறார்கள். அதிக எண்ணிக்கையில் பஸ்களை இயக்கினால் இப்பிரச்சினை
சரியாகிவிடும்.
பிரின்ஸ் கஜேந்திர பாபு (பொதுப் பள்ளிக்கான
மாநில மேடையின் பொதுச் செயலாளர்): நடுத்தர, பொருளாதாரத்தில் பின்தங்கிய
நிலையில் இருக்கும் மாணவர்கள், வீட்டிலிருந்து பள்ளிக்கு வர பொதுப்
பேருந்தையே நம்பியுள்ளனர். காலை 7.30 மணிக்கு பள்ளி ஆரம்பிக்கிறதென்றால்,
அதற்குள் பள்ளிக்கு வரவேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்படும். காலை 6
மணிக்கே எழுந்து, காலைக் கடன்களை முடித்து, காலை உணவையும் முடித்துவிட்டு
அரக்கப்பரக்க ஓடி வந்தால்தான் இது சாத்தியம். காலை 7.30 மணிக்குள்
பள்ளிக்குள் இருக்கவேண்டும் என்றால், காலை நேரத்தில் மாணவர்களுக்கு
உடற்பயிற்சி செய்ய நேரம் இருக்குமா? பாடங்களைப் படிக்க நேரம் கிடைக்குமா?
என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
அருகமைப் பள்ளிகள் முறையை அறிமுகப்படுத்தினால்,
குறிப்பிட்ட புவியியல் எல்லைக்குட்பட்ட மாணவர்கள்தான் அங்கு படிக்க
முடியும். அவர்கள் நடந்தே பள்ளிகளுக்குச் சென்று படிக்கலாம்.
ஆர்.லலிதா (9-ஆம் வகுப்பு மாணவரின் தாய்):
தில்லி போன்ற பெருநகரங்களுக்கு வேண்டுமானால், காலை நேரத்திலேயே பள்ளி
வைப்பது பொருத்தமாக இருக்கும். நம் ஊருக்கு இது சரிப்பட்டு வராது. கொஞ்சம்
வளர்ந்த குழந்தைகளுக்கு நேரம் ஒரு பிரச்சினையாக இருக்காது. ஒன்றாம்
வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலை 7.30 மணிக்குள்
பள்ளிக்குச் செல்வது என்பது கடினமானதுதான். காலை 7 மணிக்குள் குளித்து
ரெடியாகி காலை உணவை முடிக்க வேண்டும். அரக்கப்பரக்க பஸ் பிடித்து
ஓடவேண்டும். இதனால் போதிய தூக்கமில்லாமல், உணவு சாப்பிட முடியாமல், காலை
நேரத்தில் படிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்படுவார்கள். விபத்தைக்
குறைப்பதுதான் அரசின் நோக்கம் என்றால், காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக
எண்ணிக்கையில் பஸ்களை விடலாம். மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கென தனி பஸ்களை
இயக்கலாம்.
எஸ்.ரவி (4-ஆம் வகுப்பு மாணவியின் தந்தை): காலை
நேரத்தில் என் மகளை எழுப்புவதற்கே பெரும்பாடாகிவிடுகிறது. இதில் காலை 7.30
மணிக்குள் பள்ளியில் இருக்கவேண்டும் என்றால், சிரமம்தான். குழந்தைகளை
குளிப்பாட்டி, காலை உணவு அளித்து பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்குள்
பெற்றோர் பாடு திண்டாட்டமாகிவிடும். குழந்தைகளின் காலை உணவு நிச்சயம்
அடிபடும். பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும் குடும்பங்களில்
தாய்மார்களுக்கு சமையல், குழந்தைகளை பள்ளி செல்லத் தயார்படுத்தல் என்று
கூடுதல் சுமையாகிவிடும். அத்துடன், மதியம் 1 மணிக்கே குழந்தைகள் வீட்டுக்கு
வரும்போது, பெற்றோர் அலுவலகத்தில் இருப்பார்கள். இதனால் கட்டாயமாக சிறு
குழந்தைகளை பள்ளியிலிருந்து நேரடியாக கிரெச்சுக்குத்தான் அனுப்பவேண்டி
வரும். மொத்தத்தில் நேர மாற்றத்தை அரசு மறுபரிசீலனை செய்வது நல்லது.
ஆர்.சங்கரி (தனியார் பள்ளி ஆசிரியை): நேர
மாற்றத்தை நான் வரவேற்கிறேன். காலையில் சீக்கிரமே பள்ளிக்குச் சென்றால்,
சீக்கிரமே வீடு திரும்பவும் முடியும். மாலையில் நம் குழந்தைகளுக்கு பாடம்
சொல்லித் தந்து படிக்க வைக்க முடியும்.
பி.சுரேந்தர் (9-ஆம் வகுப்பு மாணவர்): காலையில்
சீக்கிரமே பள்ளிக்குப் புறப்படுவது சுத்த போரான விஷயம். காலை நேரத்தில்
பாடங்களைப் படிக்க முடியாது. அவசர அவசரமாக டிபன் சாப்பிட்டுவிட்டுப்
போவதால், சீக்கிரமே பசிக்க ஆரம்பித்துவிடும். நேரத்திலேயே
எழுந்துவிடுவதால், பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது தூக்கம்
வரும்.
எம்.பழனிசாமி (7-ஆம் வகுப்பு மாணவியின் தந்தை):
தில்லி போன்ற நகரங்களில் காலை 7 மணிக்கெல்லாம் பள்ளி வைத்துவிடுகிறார்கள்
என்றால் நம்மால் ஏன் முடியாது? காலையில் சீக்கிரமே பள்ளிக்குப் போகவேண்டும்
என்றால், பிள்ளைகள் சீக்கிரமே எழுந்துவிடுவார்கள். அதிகாலையில் விழிக்கும்
பழக்கமும் ஏற்படும். இரவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக நேரம்
செலவிடாமல் சீக்கிரமே படுக்கைக்குப் போவார்கள். பிள்ளைகளுக்கு ஒரு ஒழுங்கு
வரும். மதியம் சீக்கிரமே வீட்டுக்கு வந்து விடுவதால், சற்று நேரம்
ஓய்வெடுத்துவிட்டு, பள்ளிப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...