அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு, டிஜிட்டல் நூலக இணைப்பு
வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 100
கல்லூரிகளில், இத்திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.
வளர்ந்து வரும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, மாணவர்களை தயார்படுத்த,
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி நூலகங்களில், டிஜிட்டல் நூலக இணைப்பு
வழங்கப்பட உள்ளது. இதில், இணையதள இதழ்கள், தனியார் பதிப்பாளர் இணையதளங்கள்,
சர்வதேச அளவிலான ஆய்வு கட்டுரைகள் உள்ளிட்டவற்றை, கணினி வழியாக பெற
முடியும்.
ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள், தங்களின் பாடத் திட்டம்
மற்றும் ஆய்வுகளுக்கு, டிஜிட்டல் நூலக இணைப்பு பெரும் உதவியாக இருக்கும்.
டிஜிட்டல் நூலக இணைப்பை பெறும், ஒவ்வொரு கல்லூரிக்கும், தனியாக முகவரியும்,
ரகசிய எண்ணும் கொடுக்கப்படுகிறது.
இதுகுறித்து, பேராசிரியர் தேவி கூறியதாவது: கல்லூரிகளில் உள்ள
நூலகங்களில், குறிப்பிட்ட புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும். இதனால், பாடம்
தொடர்பாக தகவல்களை தேடும் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு, தகவல்
கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
தற்போது அறிமுகப்படுத்த உள்ள, டிஜிட்டல் நூலக இணைப்பால் அனைத்து
தகவல்களையும் எளிதில் பெற முடிகிறது. சர்வதேச அளவிலான ஆராய்ச்சி கட்டுரைகளை
படிப்பதால், மாணவர்களுக்கு ஆராய்ச்சியில் தொலைநோக்குப் பார்வை
கிடைக்கிறது. மற்ற ஆராய்ச்சிகளின் முக்கிய தகவல்களை எளிதில் பெற முடிகிறது.
இவ்வாறு, தேவி கூறினார்.
மாநில உயர்கல்வி மன்ற துணை தலைவர் சிந்தியா பாண்டியன் கூறியதாவது:
பல்கலைக்கழக மானிய குழுவின், டிஜிட்டல் நூலக வசதிகள்,
பல்கலைக்கழகத்திலிருந்து, தற்போது கல்லூரிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட
உள்ளது. பல கல்லூரிகள் தானே முன்வந்து, டிஜிட்டல் நூலக இணைப்பை பெற்றுள்ளன.
முதல் கட்டமாக, அரசு, அரசு உதவிபெறும், 100 கல்லூரிகளில் இத்திட்டம்
செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, ஒவ்வொரு கல்லூரிக்கும், அரசு, 5,000
ரூபாய் செலவிடுகிறது. மற்ற கல்லூரிகளிலும், இத்திட்டம் விரைவில்
விரிவுப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு, சிந்தியா பாண்டியன் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...