பள்ளி
முதல்வரே குழந்தைகளிடம் பாலியல் வன்முறை செய்வது... செல்போனில் படம்
எடுத்து பள்ளிச் சிறுமிகளை மிரட்டுவது... பார்வையற்ற குழந்தைகளிடம்
பாலியல் அத்துமீறல்... இப்படி பெண்குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்கள்
அன்றாடம் அவமானமாகிக் கொண்டிருக்கின்றன. பள்ளிக்கூடம் சென்ற குழந்தை மாலை
வீட்டுக்கு வரும் வரை பதற்றத்துடன் பெற்றோர் காத்துக்கிடக்கும் அவலம்தான்
இன்று நிலவுகிறது.
பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் குறித்து விரிவாகப் பேசுகிறார் ‘துளிர்’ குழந்தை பாலியல் தடுப்பு மையத்தைச் சேர்ந்த நான்சி. ‘‘சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ‘இந்தியாவில் 53.2 சதவிகிதம் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்’ என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் அவர்களுக்குத் தெரிந்த நபர்களால்தான் நடத்தப்படுகிறது.
சொந்தங்கள், பள்ளி மற்றும் அதைச் சார்ந்த இடங்களில் இருக்கும் ஆண்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், நண்பர்களின் சொந்தங்கள் என அவர்களைச் சுற்றியிருக்கும் சமூகம்தான் குழந்தைகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகிறது. குடை போன்ற சமூக சூழலில் பாலியல் வன்முறை என்பது பரந்து விரிந்து கிடக்கிறது. கிராமத்தில் மட்டும்தான் இப்படி நடக்கிறது என இதை நாம்எடுத்துக்கொள்ள முடியாது.
பொதுவாகவே சமூக, பொருளாதாரச் சூழலை வைத்தே இந்த குற்றங்கள் நடக்கின்றன. வியாபார ரீதியாக தன் எதிரியை பழிவாங்க நினைக்கும் ஒருவர், அவர் குழந்தையை வைத்து காய் நகர்த்தும் அவலம் நம் ஊரில்தான் நடந்து கொண்டிருக்கிறது. குழந்தைகள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறை அவர்களை மனதளவில் முடக்கிப் போட்டு விடுவதோடு எதிர்காலத்தில் அவர்களை மனநோயாளி ஆக்கிவிடும். நகரத்தில் நடக்கும் அநீதிகளை பற்றி பெற்றோர் பேசத் தயங்குவதால்தான் குழந்தைகள் இன்னும் பல பிரச்னைகளுக்குள் தள்ளப்படுகிறார்கள்.
தவறான தொடுதலுடன் ஒரு ஆண் அணுகும் போது அது என்னவென்றே தெரியாத குழந்தைகள்தான் வக்கிரம் பிடித்தவர்களின் இலக்கு. இப்படியே ஒவ்வொரு முறையும் அந்தக் குழந்தையை தன் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அன்றாடம் குழந்தைகள் மேல் நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் பற்றி வெளியே தெரிவதில்லை. அதுவே கொலை வழக்கில் போய் முடிந்தால் கவனத்துக்கு உள்ளாகிறது. அதிலும் டெல்லி சம்பவத்துக்குப் பிறகுதான் இதுபற்றி எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறோம்.
பிஞ்சுகள்
தனிப்பட்ட உறுப்புகள் எந்த உடலுறுப்புகள் உன் உள்ளாடையால மறைக்கப்படுதோ அவைதான் உன் தனிப்பட்ட உறுப்புகள். உன் உடல் ஆரோக்கியத்திற்காக தவிர வேறு காரணங்களுக்காக மத்தவங்க அவற்றைத் தொடுறதோ, பார்ப்பதோ அவை பற்றிப் பேசுறதோ சரி இல்லை. இதுதான் தொடுதல் விதி.
ரகசியம் தொடுதல் பற்றிய ரகசியம் நல்லதல்ல. தொடுதல் விதிகளை யாராவது மீற முயற்சி செய்தா அல்லது உன்னை ரகசியமா வெச்சுக்கச் சொன்னா அதை உடனே நீ நம்பற பெரியவங்ககிட்ட சொல்லணும்.
சத்தம் போடு, அங்கிருந்து போய்விடு...
சத்தம் போடப் பயிற்சி செய் - ஏன்னா, யாராவது உன்னைக் காயப்படுத்தவோ, உனக்குப் பிடிக்காத மாதிரியோ, பயம், குழப்பம், சங்கடம் ஏற்படுற மாதிரியோ தொட முயற்சி செய்தாங்கன்னா இதைத்தான் நீ செய்யணும்.
பரிசு
சில சமயங்களில் சில பேர் குழந்தைகளைப் பரிசு, காசு, இனிப்பு கொடுத்து ஏமாத்தி அவங்க சொல்றபடி நடக்க வைப்பாங்க. அப்போது நீ சங்கடமா குழப்பமா பாதுகாப்பு இல்லாத மாதிரி உணர்ந்தா அவங்க சொல்றதையும் செய்யாதே, கொடுப்பதையும் வாங்காதே.
கட்டியணைப்பது
மனசுக்குப் பிடிச்சவங்க நம்மள இறுக்கமா கட்டிப் பிடிச்சுக்கிட்டாலோ முத்தம் கொடுத்தாலோ ரொம்பச் சந்தோஷமா இருக்கும்மில்ல. அந்த மாதிரி உன்ன அவங்க தொடுவதை யாராவது ரகசியமா வெச்சிருக்கச் சொன்னாங்கன்னா அதை உடனே நம்பிக்கையான பெரியவங்ககிட்ட சொல்லிடு.
‘வேண்டாம்’னு சொல்லு இந்தத் தொடு தல் விதியை உங்கிட்ட யாராவது மீறினால் ‘வேண்டாம்’னு சொல்லக் கத்துக்கிறது ரொம்ப அவசியம். இதைச் சத்தமா சொல்லணும்.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகளில் 12 சதவிகிதம் மட்டுமே வெளியே தெரிய வருகிறது. தங்கள் பிள்ளையின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடும், தங்கள் குடும்பம் அவமானத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என அவர்களுக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொள்கிறார்கள்.
பள்ளிகளில் நடக்கும் அத்துமீறல்கள் சமீப காலமாக அதிகமாகி இருக்கிறது. ‘வெளியே சொன்னால் உன்னை பள்ளியை விட்டு அனுப்பி விடுவேன்’ என மிரட்டி அவர்களை தங்களின் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளும் கொடூரம் இருக்கிறது.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் மனம் விட்டு பேசுவதுதான். படிப்பைத் தவிர மற்ற விஷயங்களை பற்றி தினமும் சிறிது நேரமாவது அவர்களிடம் பேசுங்கள். குறிப்பாக மற்றவர்கள் முத்தம் கொடுத்தாலோ, அவர்களின் தொடுதல் தவறானதாக இருந்தாலோ அதை பொதுவிடத்திலேயே எதிர்க்க கற்றுக் கொடுங்கள். கொடூர செய்கையை ஆரம்பத்திலேயே எதிர்க்காவிட்டால் குற்றங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அதனால் சத்தம் போட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த குழந்தைகளுக்கு பயிற்சி கொடுங்கள்.
குழந்தைகளுக்கு அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பக்குவம் இருக்காது. எப்போதும் யாரையாவது சார்ந்திருக்கும் குழந்தைகள் தங்கள் பிரச்னைகளை மனம்விட்டு பேச தயங்குவார்கள். பெற்றோர்தான் அனுசரணையாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையின் மன
நிலையை புரிந்து கொண்டு அதற்கேற்ற படி நடந்தால் போதும். ‘பெண்கள் என்றால் இப்படித்தான் உடை அணிய வேண்டும். இப்படித்தான் சிரிக்க வேண்டும். இப்படித்தான் மற்றவர்களிடம் பேச வேண்டும்’ என அடக்குமுறைகளுக்குள் அவர்களை வளர்க்காமல், ‘பெண்களை எப்படி மதித்து நடக்க வேண்டும்’ என ஆண் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தாலே பாதி பிரச்னைகள் முடிந்து விடும்.
‘நீ கண்டுக்காம போயிடு. துஷ்டனை கண்டா தூர விலகு’ என்பது போன்ற அரதப் பழசான பழமொழிகளையும் வார்த்தைகளையும் சொல்லி பிள்ளைகளை வளர்க்காதீர்கள். ‘ஆண் என்றால் தைரியமாக அடிக்க வேண்டும். பெண் என்றால் பொறுத்துப் போக வேண்டும்’ என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் விதைக்கப்படுவது குடும்பத்தில் இருந்துதான். அதனால் உங்கள் குடும்பச் சூழலை இனிதாக வைத்துக் கொள்ளுங்கள். ஆண் பிள்ளைகளுக்கு கொடுக்கும் சலுகைகளையும் அதே சுதந்திரத்தையும் பெண் பிள்ளைகளுக்கும் கொடுங்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...