ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பீலிங்க்ஸ்
ஆசிரியர்களின் வருத்தம்!
9 ஆம் வகுப்பில் All Pass தந்து விட்டார்களே, இந்த முறை நம் பாடத்தில் பய புள்ளைங்க எவ்வளவு பாஸ் percentage வாங்குவார்களோ என 10 ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் நித்திரியை தொலைத்து விட்டார்கள்.
மாணவர்களின் வருத்தம்.!
"எழுந்து விட்டாயா? முகம் கழுவியாச்சா? என்ன படிக்கிறாய்? இவ்ளோ நேரமா சாப்பிட? பள்ளியில் என்ன நடந்தது? டியூஷனில் என்ன கொடுத்தாங்க? ஏன் மதிப்பெண் குறைந்தது?' இப்படியாக எழும் கேள்விகளுக்கு அவர்களால் நின்று நிதானித்து பதில் சொல்லக்கூட நேரம் இருக்காது. அரசு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களின் பாடு பாவம்தான்.
சக்கரம் ஒரே அச்சின் கீழ் சுழலக்கூடியது. மாணவர்களும் அப்படித்தான். அரசுப் பொதுத்தேர்வை அச்சாகக் கொண்டு சுழலக்கூடியவர்கள். முக்கியமான பாடம், முக்கியமான கேள்வி இவற்றைத்தவிர அவர்கள் வேறு எதையும் படிக்க நிர்ப்பந்திக்கப்படுவதில்லை.
ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் இடம் பிடிப்பவர்கள் பதினொன்றாம் வகுப்புத் தேர்வை மேம்புல் மேய்வதைப்போல எழுதுவதை அவர்களது விடைத்தாளை வாங்கிப்பார்த்தால் தெரியவரும்.
இந்த ஆண்டு முதல், பொதுத்தேர்வு மட்டுமில்லாமல் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளையும் அரசே நடத்துகிறது. பச்சைக்கொடி காட்டி வரவேற்க வேண்டிய ஒன்று. சமச்சீர் கல்வியைப் போல இது சமச்சீர் தேர்வு. இருப்பினும் படிப்பதற்கான சூழல் சமச்சீராக இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.
"காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' எனும் பழமொழியை, "மின்சாரம் இருக்கும்போதே படித்துக்கொள்' எனச் சொல்லிவிடலாம். சென்னையைத் தவிர தமிழகம் எங்கும் அமலில் இருக்கும் அதிகநேர மின்சார வெட்டு காரணமாக மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வருடம் தேர்வு எழுதப்போகும் மாணவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் தான். இந்த வருடம் உள்ளாட்சித்தேர்தல், மாநில, மத்திய பொதுத்தேர்தல்கள் எதுவுமில்லை. இளைய சமுதாயத்தின் "மதமான' கிரிக்கெட் போட்டியும் இல்லை. முன்னணி நடிகர்களின் படங்கள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வந்து மாணவர்களை வதம் செய்தால்தான் உண்டு.
மாணவர்களைக் கல்லூரிப் படிப்புக்குத் தயார் செய்ய பத்தாவது, பனிரெண்டாவது வகுப்புத் தேர்வுகள் படிக்கல்லாக இருப்பதால் பெற்றோர்கள் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
உறவினர் வீட்டுத் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று அலைக்கழிக்காமல் அவர்கள் படிக்க வசதி செய்துதர வேண்டும்.
மாணவர்களை நிம்மதியாகப் படிக்க விடவேண்டும். தொலைக்காட்சி தொடர்களை பெற்றோர்கள் ஒரு சில ஆண்டுகளுக்கு மறந்துவிட வேண்டும்; இந்தப் பயிற்சியால் அவற்றை நிரந்தரமாகவே பெற்றோர் மறந்தால் அது குடும்பத்துக்கே கூடுதல் நன்மையாகும்.
மாணவர்கள் எதிரில் குடும்ப விஷயங்களைப் பேசி அவர்களுடைய கவனத்தைச் சிதறவிடக்கூடாது. மாணவர்களுக்குப் பிடித்த உணவுகளைத் தருவதுடன் உடல் நலத்தைக் கெடுக்காத உணவு வகைகளையும் கொடுத்துச் சாப்பிடச் சொல்ல வேண்டும். எளிதில் செரிக்காத உணவுகளைக் கொடுத்து இரவில் படிக்க முடியாமல் தடையாக இருந்துவிடக்கூடாது.
படிப்பு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு சாப்பாடும் தூக்கமும் ஓய்வும் முக்கியம். படிக்கும் மாணவனை ஊக்குவிப்பதாகக் கருதி, இத்தனை மதிப்பெண் வாங்கினால் இந்தப் படிப்பில் சேரலாம் என்றெல்லாம் கூறி அவர்களுடைய மன அழுத்தத்தை அதிகப்படுத்தக் கூடாது. பக்கத்து வீட்டுப்பையன், உறவுக்காரப் பையன் ஆகியோருடைய சாதனைகளைப் பற்றி மட்டுமே பேசி மாணவனிடம் உள்ளூர பயத்தை ஏற்படுத்தக்கூடாது.
படிக்கவும் படித்ததை நினைவுகூரவும் தூக்கமும் ஓய்வும் அவசியம். மூளையைச் சோர்வுறச் செய்யாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.
மாணவர்களை இயல்பாக இருக்க அனுமதிக்க வேண்டும். வருவோர் போவோரிடமெல்லாம் மகனின் தேர்வு குறித்தே பேசிக்கொண்டிருக்கக் கூடாது. தேர்வு என்பது மாணவனுக்கு மட்டும் அல்ல, அவனுடைய பெற்றோர்களுக்கும்தான் என்பதையும் மறுப்பதற்கில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...