ஓராண்டில்
அதிகப்படியாகப் பேசுபவர்கள் யார் என்று ஒரு கணக்கு எடுத்தால், அதில்
மேடைப் பேச்சாளர்களுக்கு இணையாக முன்னணியில் இருப்பார்கள் ஆசிரியர்கள்.
மேடைப் பேச்சாளர்களுக்குக்கூட சம்பந்தப்பட்ட மேடையுடன் பேச்சு
முடிந்துவிடும். ஆனால், ஆசிரியர்களுக்கு பேச்சே வாழ்க்கையாகிப்
போயிருப்பதால், குரல் வளம் அவர்களுக்கு பெரும் சொத்தாக இருக்கிறது.
மாணவர்களுக்குப் புரியும்படி பாடங்களை நடத்த, நல்ல குரல் வளம் இருந்தால் மட்டுமே சாத்தியம். குரலை சரிவரப் பயன்படுத்தத் தெரியாததால், குரல் அடைப்பு, தொண்டை வலியால் அவதிப்படும் ஆசிரியர்கள் பலர்.
ஆசிரியர்கள் தங்கள் குரலை எப்படி முறையாகப் பயன்படுத்துவது என்பது குறித்து பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்து, கருத்தரங்குகள் நடத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர். மு.குமரேசன்.
பத்தாண்டுகள் தொடர்ந்து ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்களில் 20 சதவீதத்தினருக்கு குரல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்கு வெர்ச்சுவல் ரியாலிட்டி தெரபி (Virtual Reality Therapy) என்ற சிகிச்சையை அளிக்கிறோம். பல நேரங்களில், தொண்டையில் வலி, குரல் அடைப்பு என்று சொல்லும் பலருக்கும் உண்மையில் அப்படி இருப்பதில்லை. அதாவது இல்லாததை இருப்பது மாதிரியாக நினைக்கும் நிலையை பேன்டம் டிரபிள் அல்லது பேன்டம் பெயின் என்போம். தொண்டை மற்றும் குரல் தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்ய நாங்கள் நிறையப் பயிற்சிகளைக் கொடுக்கிறோம். ஸ்பீச் தெரபி, மூச்சுப் பயிற்சி மூலம் பலருக்கும் பயிற்சியளித்து வருகிறோம். இதுபோன்ற பயிற்சிகளை எத்தனை காலம் செய்வது என்று ஆசிரியர்கள் எங்களிடம் கேட்கிறார்கள். வாழ்நாளெல்லாம் செய்யவேண்டிய பயிற்சிகள் இவை. வாழ்நாளெல்லாம் நாம் பேசுவதுபோல இந்தப் பயிற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் டாக்டர். குமரேசன்.
சீரான, ஆரோக்கியமான மூச்சுப் பயிற்சியே ஆரோக்கியமான குரல்வளத்துக்கு அடிப்படைக் காரணம்" என்று கூறும் குமரேசன், மூச்சை உள்ளே இழுக்கும்போது நம் அடிவயிறு வெளித்தள்ளியும், மூச்சை வெளியே விடும்போது, நம் அடிவயிறு உள்ளிழுத்தும் இருக்க வேண்டும். அதுதான் முறையான செயல்" என்கிறார். ஆண்களுக்கு ஏற்படும் பெண் குரல் தன்மை, பெண்களுக்கு ஏற்படும் ஆண் குரல் தன்மையையும் முறையான பயிற்சியின் மூலம் ஒரே நாளில் சரி செய்துவிட முடியும்" என்கிறார் இவர்.
ஆசிரியர்களுக்கு வரும் பொதுவான பிரச்சினை என்னவென்றால், வோக்கல் கார்ட் எனப்படும் குரல் வளையில் தசை வளர்ச்சி ஏற்படுவதுதான். இதனால், தொண்டையில் ஏதோ ஒட்டிக்கொண்டிருப்பதுபோல் உணர்வார்கள். ஆனால், பரிசோதித்துப் பார்த்தால் எதுவும் இருக்காது. குரல்வளையை தவறான முறையிலும், அதிகப்படியாகவும் உபயோகிப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது. ஒரு சில மூச்சுப் பயிற்சிகள் மூலமாகவே இவற்றை சரிப்படுத்திவிட முடியும். சிலருக்கு காலை நேரத்தில் குரல் வளம் சிறப்பாக இருக்கும். மாலைக்குள் குரல் அடைப்பு, கரகரப்பு ஏற்படும். ஆசிரியர்கள், பாடகர்கள், மேடைப் பேச்சாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் போன்றோர் பேசும்போது, அடிவயிற்றிலிருந்து குரல் எழுப்பிப் பேச வேண்டும். அதுவே சரியான முறை. தொண்டையிலிருந்து ஒலி எழுப்பி பேசக்கூடாது. உணவு விஷயத்திலும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் குரல் அடைப்பு, தொண்டை வலி, வாயுப் பிரச்சினைகளுக்காக சிலர் பெப்பர்மின்ட் மிட்டா, ஜெலுசில் போன்றவற்றை உபயோகிப்பார்கள். இது தவறு. சரியான மூச்சுப் பயிற்சி இருந்தால் பெரும்பாலான தொண்டை, குரல் வளத்தை பாதிக்கும் நோய்களை துரத்திவிடலாம்" என்று நம்பிக்கை கொடுக்கும் டாக்டர். குமரேசன், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலருக்கு இலவசமாகவே குரல்வளப் பயிற்சிகளை அளித்து வருகிறார்.
குரலைப் பாதுகாக்க டாக்டர். குமரேசன் வழங்கும் உணவு ஆலோசனை இதோ:
1. இருமல் இருந்தால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு உப்பு, இரண்டு டீஸ்பூன் மஞ்சள்தூளைக் கலந்து, தொண்டையில் படும்படி கொப்பளித்துத் துப்பவும்.
2. நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் சித்தரத்தையை வாங்கி ஒரு துண்டு, வாயில் வைத்துக்கொள்ளவும்.
3. பனங்கற்கண்டுடன் ஒரு கிராம்பையும் சேர்த்து மெல்லவும்.
4. சூடான பாலில் சிறிதளவு மஞ்சள்தூள், மிளகுத் தூள், சிறு துண்டு வெல்லம் சேர்த்துக் கலந்து, இரவு படுப்பதற்குமுன் குடிக்கவும்.
5. ஒரு டம்ளர் நீரில் துளசி இலைகளைப் போட்டுக் கொதிக்க வைக்கவும். அரை டம்ளராக வற்றியதும், சிறிதளவு தேன் கலந்து பருகவும்
6. இருமலில் இருந்து விடுபட உலர்ந்த இஞ்சித்தூள், சீரகம் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிடவும்.
7. துளசிச்சாறு சேர்த்த தண்ணீரை நாள்தோறும் அருந்தி வரவும். இதனால், தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று, இருமலிலிருந்து விடுபட முடியும்.
8. நிறைய காய்கறிகள் சேர்த்து சூப் செய்து, மிளகுத்தூள் கலந்து குடிக்கவும்.
Iwant dr address. pls.
ReplyDeleteநோக்க நோக்க பாடசாலை நோக்க
ReplyDelete