தமிழகத்தில் அதிகரித்துவிட்ட லஞ்சம் மற்றும் கெடுபிடியால், பாதிக்கும்
மேற்பட்ட தனியார் பள்ளிகள் நடத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதில்
பலரும் தங்களது பள்ளியை விற்கவும், மூடவும் தயாராகி வருகின்றனர்.
மீதமுள்ள பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு, அரசின் கெடுபிடி, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பிரச்சனைகளால், பள்ளி நடத்துவதே சவாலான விசயமாக மாறியுள்ளது. பள்ளி அங்கீகாரத்துக்கு, ஐந்து லட்சம் வரையிலும், சி.பி.எஸ்.சி., பள்ளியாக இருந்தால், 35 லட்ச ரூபாயும் வரையும் லஞ்சமாக வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதுமட்டுமின்றி, உள்ளூர் கட்சி பிரமுகர்களையும் கவனித்து, அவர்களின் பரிந்துரையும் அங்கீகாரத்துக்கு அவசியம். அதுமட்டுமின்றி, தாசில்தார், தீயணைப்புத் துறையினரிடம் சான்றிதல், கட்டிட உரிமை சான்று, கட்டிட உறுதிச்சான்று, சுகாதாரச் சான்று உள்ளிட்ட ஒவ்வொன்றுக்கும், பல லட்ச ரூபாய் வரை லஞ்சமாக தர வேண்டியுள்ளது.
கட்டாயக் கல்விச்சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், 25 வகையான புது விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு வகுப்பறைக்கும், ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை, 35 மாணவர்கள், அதற்கு மேல், 40 மாணவர்கள் வீதம், ஐந்து வகுப்பறைகள் மட்டுமே நடத்த வேண்டும். வாகனங்களை இயக்குவதற்கு பல்வேறு கெடுபிடிகளையும் அரசு விதித்துள்ளது.
தமிழ்நாடு நர்ஷரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: இன்றைய நிலவரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் எண்ணிக்கை இருந்தால் மட்டுமே பள்ளியை இயக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
நவீன கட்டிடம், புதிய வசதி, வாகன வசதி, பிரபலமான பெயர் ஆகியவை இருந்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை உள்ளது. இவை இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது. அரசு தரப்பிலும், பலவித நெருக்கடிகள் உருவாகியுள்ளன.
நல்ல ரிசல்ட் கொடுத்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை இருக்கும். ஆனால், டெட் தேர்வு எழுதி, 80 சதவிகித திறமையான ஆசிரியர்கள் திடீரென அரசுப்பணியில் சேர்ந்துவிட்டனர். இதனால் ஆசிரியர் பற்றாக்குறையும் உருவாகிவிட்டது. மேலும், ஆசிரியர்களுக்கு அதிக அளவில் சம்பளம், இ.எஸ்.ஐ., - பி.எஃப்., உள்ளிட்ட சலுகைகளும் வழங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
அதிகமாகிவிட்ட மின்கட்டணம், அதிகாரிகளுக்கு லஞ்சம் என, பல மடங்கு செலவு அதிகமாகி விட்டதால், பள்ளியை நடத்துவது பெரும் சிரமமான விசயமாக மாறிவிட்டது. குறிப்பாக, 500க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள நர்சரி பள்ளிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதில் பெரும்பாலானோர் பள்ளிகளை மூடவும், விற்கவும் தயாராகிவிட்டனர். பள்ளிகள் நடத்துவதை விட, திருமண மண்டபமோ, வணிக வளாகமோ நல்ல லாபத்தை தரும் என்ற முடிவுக்கு பலரும் வந்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...