பொறியியல் கல்லூரிகளுக்கு நடப்பது போல, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும், ஒற்றை சாரள முறையில், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என, தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து, உயர்கல்வி துறை செயலருக்கு, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில தலைவர் பாண்டியன் அனுப்பியுள்ள மனு:தமிழகத்தில், 69 அரசு கல்லூரிகள், 163 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சுயநிதி கலை கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, முறையான நெறிமுறைகளை ஆண்டுதோறும் அரசு வெளியிட்டாலும், அவை பின்பற்றப்படுவதில்லை.
இதனால், மாணவர் சேர்க்கையில் அதிகபட்ச கட்டண வசூல், இடஒதுக்கீட்டை பின்பற்றாத மாணவர் சேர்க்கை, கட்டாய நன்கொடை வசூல், சுயநிதி பாடப்பரிவுகளுக்கு முன்னுரிமை, மாணவர் சேர்க்கை இல்லையென கூறி, அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒற்றை சாளர முறையை பின்பற்றினால் மட்டுமே, இம்முறைகேடுகளை களைய முடியும் என, உயர்கல்வி துறை செயலர் மற்றும் இயக்குனருக்கு, கடந்த கல்வியாண்டின் போதே தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறை சிக்கல்கள், கால அவசாகம் இன்மை உள்ளிட்ட காரணங்களால், அடுத்த கல்வியாண்டில், ஒற்றை சாளர முறையை அமல் செய்ய பரிசீலிக்கப்படும் என, உறுதியளித்தனர்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் நலன் கருதி, வரும் கல்வியாண்டு முதல், அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில், ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும். இவ்வாறு பாண்டியன் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...