9-ஆம் வகுப்புக்கும் வகுப்புக்கும் வருகிறது முப்பருவத் தேர்வு முறை!
தமிழ்நாட்டில்
இதுவரை ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை
நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த முப்பருவத் தேர்வு முறை வரும் கல்வியாண்டில்
9-ஆம் வகுப்புக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து பத்தாம்
வகுப்புக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி
அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை முப்பருவத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என மூன்று பருவங்களுக்கும் தனித்தனியே புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. காலாண்டுப் பருவத்துக்கு அந்தப் பாடப்புத்தகங்களை மட்டும் கொண்டு வந்தால் போதும்.
அரையாண்டுக்கு அதற்குரிய பாடப்புத்தகங்கள்
மட்டும் கொண்டு வந்தால் போதும். மூன்றாவது பருவத்துக்கும் இதே முறைதான்.
இதனால், பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை தூக்கிச் செல்லுகின்ற சிரமம்
பெரிதும் குறைந்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், தொடர் மற்றும் முழுமையான
மதிப்பீட்டு முறை (சிசிஇ) அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் வளரறி
மதிப்பீட்டு முறை, தொகுத்தறி மதிப்பீட்டு முறை என்ற இரு பிரிவுகளின்கீழ்
மாணவர்களின் திறமைகள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவத்
தேர்வு முறை கொண்டு வரப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர்
என்.ஆர். சிவபதி, மத்திய கல்வி ஆலோசனை போர்டு கூட்டத்தில்
தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை 2013-14 கல்வியாண்டிலிருந்து 10-ஆம்
வகுப்புக்கும் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார்
அவர்.
தமிழகப் பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் முப்பருவத் தேர்வு முறை குறித்து பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் என்ன கூறுகிறார்கள்? “ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவத் தேர்வு முறை கொண்டு வருவதன் மூலம் 11-ஆம் வகுப்பில் மாணவர்களுக்கு குரூப் ஒதுக்கீடு செய்வது சிரமமாக இருக்கும்” என்கிறார், தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி எஸ்.யு.எம். மேல்நிலைப் பள்ளித் தாளாளர் எம்.எஸ். பிரபாகரன். “பிளஸ் ஒன் படிப்பதற்கு பத்தாம் வகுப்புத் தேர்ச்சி முக்கியமானது. எனவே. தற்போதுள்ள முறையே தொடர வேண்டும்” என்கிறார், அதே பள்ளியைச் சேர்ந்த கணித ஆசிரியர் தாமஸ்.
“முப்பருவ முறை பாடத்திட்டத்தில் படிக்கும் போது, பாடங்களை மாணவர்கள் எளிதாகக் கற்க முடியும். முடிந்து போன பருவத்தின் பாடங்களை மீண்டும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால், சராசரி மாணவர்களும் எளிதாகத் தேர்ச்சி பெற முடியும்” என்கிறார், மாதவரம் மாத்தூர் செயின்ட் தாமஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரியை சரளா. “முப்பருவக் கல்வி முறையினால் படிப்பில் ஆர்வம் குறைந்த மாணவர்களும் மற்ற திறமைகளின் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்கிறார், தாம்பரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ரேவதி. “தற்போதுள்ள முறைப்படியே பத்தாம் வகுப்புத் தேர்வு இருந்தால்தான் எங்களது முழுத் திறமையையும் காட்ட முடியும்” என்கிறார், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் உமேஷ். “முப்பருவத் தேர்வு முறை எளிமையாக உள்ளது. தேர்வு குறித்த பயத்தைப் போக்குவதாக உள்ளது. இதனை பத்தாம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும்” என விரும்புகிறோம் என்கிறார்கள், 9-ஆம் வகுப்பு படிக்கும் ஷாலினி, பிரியங்கா.
“9 -ஆம் வகுப்பிலும் முப்பருவத் தேர்வு முறையைக் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. தற்போதுள்ள பாடத்திட்டத்தையே மூன்று பருவங்களாகப் பிரித்துத் தருவது மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தாது. அதற்கு மாறாக, ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியே பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினால் கல்வித் தரம் உயரும்” என்கிறார், கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன்.
“முப்பருவத் தேர்வு முறையின் முக்கிய அம்சம் மாணவர்களின் பாடச்சுமையைக் குறைப்பது. வளரறி மதிப்பீட்டு முறை, தொகுத்தறி மதிப்பீட்டு முறை மூலம் மாணவர்களின் முழுத் திறமையையும் மதிப்பிட முடிகிறது” என்பது பல கல்வியாளர்களின் பொதுவான கருத்து. காலத்துக்கேற்ற மாறுதல்கள் தவிர்க்க முடியாதவை. மாற்றம்தானே நிரந்தரம்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...