பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும்
விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் கல்வி நிலையங்களைத் தொடங்கும் நேரத்தை
மாற்றுவது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில்
தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் போக்குவரத்துத் துறை
மற்றும் போக்குவரத்து காவல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று தனித்தனி அறிக்கைகள் தாக்கல்
செய்யப்பட்டன. அதில், காலை நேரங்களில் பேருந்துகளில் ஏற்படும் கூட்ட
நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கும்
நேரத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளைக்
கேட்டுக் கொண்டுள்ளோம்.
குறிப்பாக, தற்போதுள்ள நேரத்தை மாற்றி பள்ளிகள் காலை 7.30 மணிக்கும்,
கல்லூரிகள் காலை 8 மணிக்கும் தொடங்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு
கூறியுள்ளோம். மேலும், பேருந்து விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் பள்ளி
மாணவர்களுக்கென தனியாக தினமும் 40 சிறப்பு பேருந்துகளும், பெண்கள் மற்றும்
மாணவர்களுக்கென 124 பேருந்துகளும், அதிக கூட்ட நெரிசல் உள்ள நேரங்களில் 100
சிறப்பு பேருந்துகளும் தற்போது இயக்கப்படுகின்றன.
பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்தமைக்காக கடந்த டிசம்பர் மாதத்தில்
மட்டும் சென்னை மாநகரில் 4 ஆயிரத்து 415 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,
ரூ.4 லட்சத்து 41 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. படிக்கட்டு
பயணத்தின் ஆபத்துகளை விளக்கியும், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்ற
வேண்டிய அவசியம் குறித்தும் பள்ளி, கல்லூரிகளில் 192 விழிப்புணர்வு
நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து காவல் துறை மேற்கொண்ட பல்வேறு
நடவடிக்கைகள் காரணமாக தற்போது பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வோரின்
எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கைகளில்
கூறப்பட்டுள்ளன.
சென்னை பெருங்குடி அருகே கடந்த டிசம்பர் 10ம் தேதி நடந்த விபத்தில்
பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 3 பேர்
படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே
முன் வந்து வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் பள்ளி நேரத்தை மாற்றுவது
குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...