"உங்கள் பணம் உங்கள் கையில்" திட்டத்தை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
மத்திய அரசு, பல்வேறு திட்டங்களின் கீழ் கோடிக்கணக்கான ரூபாயை மான்யமாக வழங்கி வருகிறது. மத்திய அரசு வழங்கும் மான்யம், பயனாளிகளிடம் நேரடியாக சென்று சேரும் வகையில் "உங்கள் பணம் உங்கள் கையில் &' என்ற புதிய திட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம், நாடு முழுவதும், 20 மாவட்டங்களில், ஜனவரி 1ம் தேதி முதல், அமலுக்கு வந்தது. இதில், புதுச்சேரியும், ஒரு மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய அரசின், 15 திட்டங்களுக்கான மான்யம், புதுச்சேரியில் உள்ள பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஆதார் கார்டு வந்து சேராதது, பாங்க் கணக்கு துவக்காதது போன்ற காரணங்களால், இரண்டு திட்டங்களுக்கு மட்டுமே நேரடி மான்யம் வழங்கும் திட்டம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு திட்டங்களுக்கான பயனாளிகளுக்கு, பாங்க் பாஸ் புத்தகம் வழங்கும் விழா நேற்றுமுன்தினம் மேட்டுப்பாளையத்திலுள்ள இந்தியன் பாங்க் கிளையில் நடந்தது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ், உயர் கல்விக்கான உதவித் தொகை பெறும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, பாங்க் பாஸ் புத்தகத்தை, முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
முதல்வர் ரங்கசாமி கூறும்போது, "உங்கள் பணம் உங்கள் கையில்" திட்டத்தின் கீழ், மத்திய அரசின், 2 திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு, 26 லட்சம் ரூபாய், உயர்கல்விக்கான உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டு திட்டங்கள் மட்டும் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள திட்டங்களின் கீழ் மான்யத்தை நேரடியாக வழங்குவது, 10 நாட்களில் அமல்படுத்தப்படும்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...