2013 மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க விரும்பும்
தனித்தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் ஜனவரி 7 முதல் 18 வரை விண்ணப்பிக்கலாம்
என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில்
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது. தமிழகம் முழுவதும்
சுமார் 8 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.
இந்தத் தேர்வில் ஏற்கெனவே தேர்வு எழுதி தேர்ச்சிப் பெறாதவர்கள்
தனித்தேர்வர்களாகவும் (எச் வகையினர்), பத்தாம் வகுப்புத் தேர்வு அல்லது
அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் இடைவெளியும்,
1.4.2013-ம் தேதி 16 1/2 வயதும் பூர்த்தியடைந்தவர்கள் நேரடித்
தனித்தேர்வர்களாகவும் (எச்பி வகையினர்) விண்ணப்பிக்கலாம்.
நேரடித் தனித்தேர்வர்கள் வரலாறு, பொருளியல் உள்ளிட்ட ஐந்து வகையான
பாடத்தொகுப்புகளில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் தமது புகைப்படத்தை
"அப்லோடு' செய்து, முழுமையான விவரங்களைப் பூர்த்திசெய்த பிறகு,
அவர்களுக்கான விண்ணப்ப எண் வழங்கப்படும். இந்த விண்ணப்ப எண்ணை
தனித்தேர்வர்கள் உடன் குறித்துக்கொள்ள வேண்டும்.
இந்த விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே, புகைப்படத்துடன் விவரங்களைப் பதிவு
செய்த விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய சலானையும்
பதிவிறக்கம் செய்துகொள்ள இயலும்.
இந்த விண்ணப்பத்தை நகலெடுத்து தேர்வர்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த
எண்ணைப் பயன்படுத்தியே எந்தவொரு சந்தேகங்களுக்கும் தேர்வுத்துறையிடம்
முறையீடு செய்யவோ, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பெறவோ முடியும்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில் புகைப்படத்தை ஒட்டி, அதில் கடைசியாகப்
பயின்ற பள்ளித் தலைமையாசிரியரிடம் சான்றொப்பம் பெறுதல் வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: மறுமுறை தேர்வு எழுதுவோர் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50
வீதம் தேர்வுக் கட்டணமும், இதரக் கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும்.
நேரடித் தனித்தேர்வர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.150-ம், இதர கட்டணம் ரூ.35,
கேட்டல், பேசுதல் திறன் தேர்வு ரூ.2 என மொத்தமாக ரூ.187 செலுத்த வேண்டும்.
கோர் பேங்கிங் சேவை உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கிளையில்
தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய இறுதி தேதி ஜனவரி 19 ஆகும்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இடங்கள்: சென்னை, திருநெல்வேலி, மதுரை,
கோவை, திருச்சி, கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து விண்ணப்பிக்கும்
தனித்தேர்வர்கள், அங்குள்ள மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களிலும், இதர
மாவட்டங்களிலிருந்து விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் அவரவர்
மாவட்டத்திலுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் ஜனவரி 7
முதல் 19-க்குள் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
அஞ்சல் மூலம்
விண்ணப்பங்களை அனுப்பக் கூடாது.
விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டிய நகல்கள்: வங்கிச் சலான்,
சான்றொப்பமிடப்பட்ட மதிப்பெண் சான்றிதழின் நகல், பள்ளித் தலைமையாசிரியரிடம்
இருந்து பெற்ற தகுதிச் சான்றிதழ் (பள்ளி மாணவர்களாகப் பதிவு செய்து தேர்வு
எழுதாதவர்களுக்கு மட்டும்), செய்முறை மதிப்பெண்களுக்கான ஆவணம் (செய்முறைப்
பாடங்கள் உள்ள தேர்வுகள் எழுதுவோர் மட்டும்) இணைத்து விண்ணப்பங்களைச்
சமர்ப்பிக்க வேண்டும்.
நேரடித் தனித்தேர்வர்களுக்கு வங்கிச் சலான், பத்தாம் வகுப்பு மற்றும்
அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்,
பள்ளி மாறுதல் சான்றிதழின் அசல், இடப்பெயர்வு சான்றிதழ் (வெளிமாநில
மாணவர்கள் மட்டும்) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...