Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1 கோடி மாணவர்களின் விவரங்கள் ஜனவரிக்குள் இணையதளத்தில் வெளியீடு


      தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகள், 5.5 லட்சம் ஆசிரியர்கள், 1.33 கோடி மாணவர்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. 
 
      இந்த விவரங்கள் அனைத்தும் துறையின் இணையதளத்தில் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று துறை வட்டாரங்கள் தெரிவித்தன.முதல்கட்டமாக, பள்ளிகள், ஆசிரியர்கள் தொடர்பான தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் 55,667 பள்ளிகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில் 34,871 தொடக்கப்பள்ளிகளும் (63%), 9,969 இடைநிலைப் பள்ளிகளும் (18%), 5,167 உயர்நிலைப் பள்ளிகளும் (9%), 5,660 மேல்நிலைப் பள்ளிகளும் (10%) உள்ளதாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

        பள்ளிக் கல்வித் துறைக்கு www.tnschools.gov.in என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் வெளியிடுவதற்காகவும், கல்வித் தகவல் சார்ந்த மேலாண் முறைமைக்காகவும் (EMIS - Educational Management Information System) பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

         இந்த இணையதளம் மற்றும் இதற்கான சாப்ட்வேரை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இதற்கான சர்வர் உள்ளிட்டவை எல்காட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளன.

        பள்ளிகள், மாணவர்களின் தகவல் திரட்டும் பணி கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கியது. டிசம்பர் இறுதியில் இந்தப் பணிகள் நிறைவடைந்தன. முதல்கட்டமாக, பள்ளிகள், ஆசிரியர்களின் விவரங்களைப் பதிவுசெய்யும் பணி முடிந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் மேலும் கூறியது: அனைத்துப் பள்ளிகளின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இப்போது மாணவர்களின் விவரங்களைப் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

         திருச்சி மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளின் விவரங்கள் மட்டும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. அதன் பிறகு, அந்தநல்லூர், மணிகண்டம் ஒன்றியம் உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் விவரங்களும் பரிசோதனை முயற்சியாக பதிவு செய்யப்பட்டன. ஒன்றியத்தில் உள்ள 100 முதல் 140 பள்ளிகள், மாணவர்களின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் எந்தப் பிரச்னையும் எழவில்லை. இதைத்தொடர்ந்து, இப்போது மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களின் தகவல்களைப் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

         தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற 5 முதல் 10 ஆசிரியர்களைக் கொண்டு இந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. விவரங்களைப் பதிவு செய்வதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் இந்தப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிகள் தொடர்பான விவரங்களில் பள்ளி திறக்கப்பட்ட தேதி, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

        மாணவர் தொடர்பான விவரங்களில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, தந்தையின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த தேதி, அவர்களின் கல்வித் தகுதி, அனுபவம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறை ஆகிய துறைகள் இந்தப் பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்படுகின்றன. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலமாகவும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலமாகவும் தகவல்கள் திரட்டப்படுகின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive