அரசின் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று, வனத்துறை அதிகாரிகளாக
பொறுப்பேற்கும் இளம் அதிகாரிகளுக்கு, நீலகிரியில் களப்பயிற்சி
அளிக்கப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மட்டும், இப்பயிற்சியில்
பங்கேற்பதில்லை என கூறப்படுகிறது.
மத்திய அரசின் சார்பில் உயிர்ச்சூழல் மண்டலங்களில்,
களப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில் களப்பயிற்சிகள் பெரும்பாலும்,
ஊட்டியில் அளிக்கப்படுகின்றன. மத்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு
ஆராய்ச்சி மையம் சார்பில் அளிக்கப்படும் பயிற்சியில், வன நிலங்களின்
அமைப்பு, நீராதாரங்கள், அவற்றின் பயன்பாடு குறித்து விளக்கப்படுகின்றன.
தடுப்பணை அமைத்து, வெள்ளப்பெருக்கின் வேகத்தை
கட்டுப்படுத்துவது, அதன் மூலம் வெள்ள சேதங்களை தவிர்ப்பது குறித்த
பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சிகள் மூலம் வன வளத்தை 100 சதவீதம்
பாதுகாக்க கூடிய வழிமுறைகளை அதிகாரிகள் கற்றுக் கொள்கின்றனர்.
ஊட்டியில் அவ்வப்போது நடக்கும் இத்தகைய பயிற்சியில்,
ஜம்மு- காஷ்மீர், சிக்கிம், அசாம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, குஜராத் என,
பல மாநிலங்களில் இருந்தும், இளம் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஆசியாவின்
மிகச்சிறந்த உயிர்சூழல் மண்டலமான, நீலகிரி மலையில், பிற மாநில வனத்துறை
அதிகாரிகள் பயிற்சி பெற்று செல்லும் நிலையில், தமிழக வனத்துறையில், உதவி வன
பாதுகாவலர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்பதில்லை.
மாநிலத்தில், புதிதாக பணியில் சேர உள்ள இளம்
அதிகாரிகளுக்கு, இத்தகைய களப்பயிற்சிகளை வழங்க வன உயரதிகாரிகள், மத்திய
அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால், தமிழக வனத்துறை அதிகாரிகள்,
இத்தகைய பரிந்துரையை செய்வதில்லை, எனக் கூறப்படுகிறது.
மெல்ல குறையும் வனப்பரப்பு, வன விலங்குகள் அழிவு உட்பட பல
பிரச்னைகளை தமிழக வனங்கள் எதிர்கொண்டுள்ள நிலையில், அவற்றை தவிர்க்க
சரியான திட்டமிடலை வகுக்க வேண்டியது அவசியம். அதற்கு, இத்தகைய
களப்பயிற்சிகள் உதவும், என்பதை உணர்ந்து, மாநில வனத்துறையில் பணியில்
சேரும் இளம் அதிகாரிகளுக்கு, இத்தகைய களப்பயிற்சிகளை வழங்க நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, பயிற்சியாளர்கள் விரும்புகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...