அரசு அறிவித்துள்ள "அட்சய
பாத்திரம்" திட்டம் குறித்து பள்ளி கல்வித்துறை சார்பில் முறையான
அறிவிப்பு இல்லாததால், இதை செயல்படுத்த தலைமை ஆசிரியர்கள் தயக்கம் காட்டி
வருகின்றனர்.
தமிழகத்தில்,
உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களிடம், சமுதாய ஏற்றதாழ்வு உள்ளதாக எழுந்த
புகாரை களையும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் "அட்சய பாத்திரம்" திட்டத்தை
அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்
அறையிலோ, சத்துணவு மையம் முன்போ "அட்சய பாத்திரம்" என, எழுதிய ஒரு
பாத்திரத்தை வைக்க வேண்டும். அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தினமும்
வீட்டில் இருந்து ஏதேனும் ஒரு காய் கொண்டு வந்து இப்பாத்திரத்தில் இட
வேண்டும்.
மறுநாள் சமைக்கும் போது, அட்சய பாத்திரத்தில்
உள்ள காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். பாத்திரத்தில், எந்த
மாணவர் காய் இட்டுள்ளார் என்பது குறித்த தகவல் யாருக்கும் தெரியாமல்
ரகசியமாக வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒன்றிய
அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பள்ளிகளில் அட்சய
பாத்திரம் வைப்பது குறித்து பள்ளி கல்வி துறை சார்பில் எவ்வித அறிவிப்பும்
வெளியாகாததால், இதை செயல்படுத்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயக்கம் காட்டி
வருகின்றனர். இதனால், ஒன்றிய அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒன்றியத்துக்கு
அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: "அட்சய பாத்திரம்" திட்டம்
பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து சத்துணவு
தயாரிப்பதற்கு தேவையான காய்கறிகள் கொண்டு வந்து அட்சய பாத்திரத்தில்
வழங்கவும், மாணவர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளுதல், பொதுமக்களின் சமூக
பங்களிப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு, நடைமுறைப்படுத்தும் திட்டம்.
திட்டத்தின் நோக்கம் குறித்து ஒன்றிய
கட்டுபாட்டில் உள்ள சத்துணவு மையங்களில் உணவு உண்ணும் மாணவர்கள் தெரிந்து
கொள்ளவும், அவர்களை பங்கு பெற செய்யவும் அனைத்து பள்ளி சத்துணவு
அமைப்பாளர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும். இதுகுறித்த நடவடிக்கையை
ஒன்றியம், நகராட்சி அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், "மாவட்ட
நிர்வாகம் சார்பில் வந்துள்ள அறிக்கையை அந்தந்த உதவி துவக்க கல்வி
அலுவலர்களுக்கு அனுப்பி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும்.
அந்தந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்களிப்புடன், அட்சய பாத்திரம் வாங்கி,
வரும் ஜனவரி முதல் தேதியில் இருந்து இத்திட்டத்தை செயல்படுத்த
திட்டமிடப்பட்டுள்ளது," என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...