தமிழக அரசு கல்லூரி மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில், கல்வி கற்க, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சிலுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மாணவர்களின் கற்கும் திறன், புரிந்து கொள்ளும் ஆற்றல், பேராசிரியர்களின் கற்பிக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், மாணவர்களையும், ஆசிரியர்களையும்,வெளிநாட்டு பல்கலை கழகங்களுக்கு அனுப்பி, கல்வி கற்றல், சிறப்பு பயிற்சி மற்றும் கூட்டு ஆராய்ச்சிக்கு, அரசு முடிவெடுத்தது.
இதன்படி, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள, அரசு கொள்கை அளவில் இசைவு அளித்துள்ளது. முதல்கட்டமாக, அடுத்தாண்டு முதல், 25 மாணவர்கள் மற்றும், ஐந்து பேராசிரியர்கள் வெளிநாடு சென்று கல்வி கற்கவும், பயிற்சி மேற்கொள்ளவும், பிரிட்டிஷ் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள, தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்திற்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாணவர் மற்றும் பேராசிரியருக்கு, உயர்கல்வி மன்றம் மூலம், 15 லட்சம் ரூபாய் அனுமதித்தும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ், முதல் ஆண்டு முதுகலை படிக்கும் மாணவர்கள், தேர்வு செய்யப்பட்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் பருவத்தில் வெளிநாட்டு பல்கலைகழகத்தில் படிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.
அதே பருவத்தில், பேராசிரியர்களுக்கும் உரிய பயிற்சி மேற்கொள்ளவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...