ஆசிரியர்கள் தகவல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்ப சாதனங்களை
பயன்படுத்தி, மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகள் பற்றிய ஆய்வை, சென்னை
பல்கலைக் கழகம் மேற்கொண்டு வருகிறது. முதல் கட்டமாக, நடுநிலைப் பள்ளி
ஆசிரியர்களிடம், இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை, திருவள்ளுவர் மாவட்டங்களில் உள்ள, அரசு, அரசு உதவி
பெறும், சுயநிதி நடுநிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், தகவல் மற்றும்
தொடர்பியல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி, மாணவர்களுக்கு கல்வி
கற்பிக்கும் முறை குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
ஒரு பள்ளிக்கு ஐந்து ஆசிரியர் என, இரு மாவட்டங்களிலும்
உள்ள, 100 பள்ளிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், தகவல்
தொழில்நுட்ப சாதனங்களை கிராமப்புற, நகர்ப்புற ஆசிரியர்கள் பயன்படுத்துவதில்
உள்ள வேறுபாடுகள், தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்த, ஆசிரியர்கள் பயிற்சி
மேற்கொள்கின்றனரா, அதற்கு நேரத்தை செலவு செய்ய விரும்புகின்றனரா என்பது
குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன.
ஆய்வு முடிவை அடிப்படையாக வைத்து, தகவல் தொழில்நுட்ப
சாதனங்கள் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு, அரசு பயிற்சி அளிக்க உள்ளது.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் (பொறுப்பு),
மாதேஸ்வரன் கூறியதாவது:
முதல் கட்டமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த
ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பின், அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில்
இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். தகவல் தொழில்நுட்பம் குறித்த அறிவு,
ஆசிரியர்களுக்கு உள்ளதா என்பதை கண்டறிவதே இதன் முக்கிய நோக்கம். இன்னும்,
மூன்று மாதங்களில் இந்த ஆய்வின் முழு தகவல் வெளியாகும். இவ்வாறு அவர்
கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...