பள்ளிகளில், தினமும் குழந்தைகளுக்கு
வழங்கப்படும் சாப்பாடு மற்றும் முட்டை மாதிரியை, பள்ளி செயல்படும் வரை
எடுத்து வைத்து, மாலை வரை குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும்
ஏற்படாவிட்டால், அதை அப்புறப்படுத்த வேண்டும்,' என, சத்துணவு
பணியாளர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும்
மாணவர்களுக்கு, அடிக்கடி வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள்
ஏற்படுவது வாடிக்கையாக தொடர்கிறது. இதை தவிர்க்கும் வகையில், அதிகாரிகள்
மூலம் தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் சத்துணவு மையங்களை ஆய்வு செய்யப்பட்டது.
பெரும்பாலான சத்துணவு மையங்கள், சுகாதாரமின்றி
இருப்பதால் தான் பாதிப்பு ஏற்படுவதாக தெரிந்துள்ளது. இதையடுத்து,
பள்ளிகளின் சத்துணவு மையங்களில், கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்
குறித்து அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
சமையலர் மற்றும் உதவியாளர் தினமும்
குளித்துவிட்டு, தலையை நன்கு பின்னலிட்டு வாரி, நல்ல துவைத்த உடை அணிந்து
நகங்களை சுத்தம் செய்து உணவை தயாரிக்க வேண்டும். சமையல் அறை மற்றும் அதை
சுற்றியுள்ள இடங்களில் சுத்தமான முறையில் வைத்து பராமரிக்கப்பட வேண்டும்.
பள்ளி குழந்தைகளை எக்காரணம் கொண்டும் சமையல் செய்யும் இடங்களில்
அனுமதிக்கக்கூடாது.
சமையல் கூடத்தில் விறகுகளை கண்டிப்பாக அடுக்கி
வைக்கக்கூõடது. மையத்தினை ஒட்டடை அடித்து பல்லி மற்றும் சிலந்தி வலைகள்
இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமையல் செய்யும் பாத்திரங்களை
நன்கு சுத்தம் செய்து, சுத்தமான நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
திறந்தவெளியில் சமைக்கக்கூடாது. சமைக்கும் போது, பாத்திரங்களை மூடிவைக்க
வேண்டும். முட்டையை தனியாக வேக வைக்க வேண்டும். அழுகிய நிலையில் இருந்தால்
உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
குழந்தைகள் உணவு உட்கொள்ளும் முன், கைகளை நன்கு
சோப்பு போட்டு கழுவிய பின் சாப்பிட அனுமதிக்க வேண்டும். உணவு பொருட்களை
அவ்வப்போது சுத்தம் செய்து மூடி வைக்க வேண்டும். அதிகமாக பொருட்களை இருப்பு
வைத்தல் கூடாது. அனுமதி பெறாத பணியாளர் எவரையும் பணியில்
வைத்திருக்கக்கூடாது.
தினமும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சாப்பாடு
மற்றும் முட்டை மாதிரியை பள்ளி செயல்படும் வரை வைத்திருக்க வேண்டும்.
மாலையில், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படா விட்டால் அதை அப்புறப்படுத்த
வேண்டும். உணவு உண்பதற்கு போதுமான குடிநீர் வசதி இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு சுடுநீர் அல்லது பாதுகாப்பான குடிநீர் மட்டும் வழங்க
வேண்டும் என்பது உள்ளிட்ட வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து
மையங்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...