கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும்
மடிக்கணிகளை மாணவர்கள் விற்று வருவதைத் தடுக்க, உயர்கல்வித்துறை, புது
திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இதையடுத்து, மடிக்கணினிகளை, அன்றாடம்
பயன்படுத்தும் திட்டம், கல்வித்துறையில் விரைவில் அமலாகும் எனத் தெரிகிறது.
மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில்,
அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் ஒன்றாக, விலையில்லா
மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை, கடந்தாண்டு அரசு அறிமுகப்படுத்தியது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் முதலாமாண்டு மற்றும்
இறுதியாண்டு மாணவர்களுக்கு, விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது.கடந்தாண்டு, கல்லூரியில் படித்த மூன்றாமாண்டு மாணவர்கள், 1.42 லட்சம் பேருக்கு, மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. தற்போது, முதலாமாண்டு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. மடிக்கணினி குறித்த போதிய அறிவு இல்லாத காரணத்தால், பாடல்களை கேட்கவும், சினிமா பார்க்கவும் மடிக்கணினிகளை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர் என்ற புகார் உள்ளது. மேலும், சிலர் மடிக்கணினிகளை விற்று விடுகின்றனர்.
அரசின் மடிக்கணினிகள், தற்போது சந்தையில் அடிமாட்டு விலைக்கு அமோகமாகக் கிடைக்கின்றன. கேரள வியாபாரிகள் இவற்றை, 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை வாங்கி, கூடுதல் விலைக்கு கேரளாவில் விற்கின்றனர் என்ற புகார், பரவலாக எழுந்திருக்கிறது; அரசுக்கும் பல புகார்கள் சென்றுள்ளன.
மடிக்கணினி விற்பதை தடுக்க, நடவடிக்கைகள் எடுக்க, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அனைத்து கல்லூரிகளுக்கும், கல்லூரி கல்வி இயக்குனரகம், சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில், மடிக்கணினியை பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், தினமும் கல்லூரிகளுக்கு மடிக்கணினியை கொண்டு வர வேண்டும்; இதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். தொலை தூரங்களிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் மடிக்கணினிகளை கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறியதாவது: ஏழை மாணவனும் கணினி அறிவு பெற வேண்டும் என்ற நோக்கில் கொடுக்கப்பட்ட மடிக்கணினியை, விற்பனை செய்வது வேதனைக்குரியது. கல்லூரியில் உள்ள வரை, மாணவர்கள் மடிக்கணினி பயன்பாடு குறித்து கண்காணிக்கப்படும். மடிக்கணினிகளை தினமும் கல்லூரிகளில் பயன்படுத்தும் வகையில், கணினி வழியாக பாடத்திட்டங்கள் கற்கும் முறை, விரைவில் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...