அடுத்த 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்கிறார் இந்திய விஞ்ஞானி அய்யம்பெருமாள்.
2012-ல் உலகம் அழிவது சர்வ நிச்சயம் என்று அடித்துக் கூறி வருகிறார்கள் சில மேற்கத்திய விஞ்ஞானிகளும் ஜோதிடர்களும்.
இதற்கு ஆதாரமாக ஏழு காரணங்களை அவர்கள் சொல்லி வருகிறார்கள்.
1. மாயன் காலண்டர்:
மாயன் நாகரிகத்தின் கருதுகோள்படி, உலகம் 2012-ல் அழிந்தாக வேண்டும். மாயன் காலண்டரில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாம். இன்று நாம் பின்பற்றும் தேதி முறை உள்ளிட்ட பல விஷயங்களை கிட்டத்தட்ட துல்லியமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர்கள் இவர்கள்தானாம். சூரியன் காலாவதியாகும் தேதியையும இவர்கள் கணித்து வைத்துள்ளார்களாம். அதுதான் இந்த 2012 என்று கூறுகிறார்கள்.
2. சூரியப் புயல்கள்
சூரியனுக்குள் ஏற்படவிருக்கும் பனிப்புயல்கள் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு பூமியை பொசுக்கிவிடும் என்கிறார்கள் சூரிய ஆராய்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர்.
3. அணு சிதைவு
ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் உலகின் பெரிய மூலக்கூறு உந்து எந்திரத்தைக் கண்டறிந்துள்ளனர். 27 கிலோ மீட்டர் ஆழமுள்ள சுரங்கத்தில் வைத்து அணுக்களை ஒன்றிணைத்து வெடிக்க வைப்பது திட்டம். எதற்காக இது? உலகம் உருவான விதம், உலகை இயக்கும் அடிப்படை கட்டமைப்பைத் தெரிந்து கொள்ள இந்த சோதனையாம். 2012-ல் இந்த சோதனை நடக்கிறதாம். அப்படி நடந்தால் இந்த பூமியே நொறுங்கிவிடுமாம்.
4. சூப்பர் வல்கனோ
இந்த உலகமே பெரிய எரிமலை ஒன்றில் வாயில் இருப்பதாகவும், அது வெடித்துச் சிதறினால் உலகம் தூள்தூளாகிவிடும் என்றும் அமெரிக்க மண்ணியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 650000 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த எரிமலை வெடிக்குமாம். அப்படிப் பார்த்தால் இந்த 2012-ல் அந்த எரிமலை வெடிக்கப் போகும் வருடமாம்!
5. கணிதவியல் அடிப்படையில்…
அமெரிக்காவின் பெர்க்கர்லி பல்கலைக் கழக அறிஞர்கள் சிம்பிளாக ஒரு கணக்கு சொல்கிறார்கள். இந்த பூமியின் ஆயுள் எப்போதோ முடிந்துவிட்டதாம். இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாகவும், 2012-ல் அழிவின் உச்சகட்டம் தொடங்கும் என்றும் கூறுகிறார்கள்.
6. புவியின் காந்தப் புலம்
வடக்கு, தெற்கு என பூமியில் காந்தப் புலம் இருப்பது தெரிந்திருக்கும். இந்த காந்தப் புலம்தான் உலகை நிலைப்படுத்தி இயங்க வைக்கிறது. ஆனால் ஒவ்வொரு 750000 வருடங்களுக்கும் ஒருமுறை பூமியின் காந்தப் புலம் தலைகீழாக மாறுமாம். அப்படி மாறும்போது அடுத்த 100 ஆண்டுகளுக்கு காந்தப் புலம் என்பதே இல்லாமல் போகுமாம். அப்படி இல்லாமல் போகும் தருணத்தில் புற ஊதாக் கதிர்கள் வெளிப்பட்டு மனிதன், விலங்கினம், தாவரங்கள் என அனைத்தையும் நொடியில் பொசுக்கிவிடுமாம்.
-இவையெல்லாம் 2012 அழிவுக்கு ஆதாரமாக சொல்லப்படும் காரணங்கள்.
ஆனால் நமது இந்திய விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?
இதோ ஒரு பாஸிடிவ் பதில்:
சென்னை பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் டாக்டர் பி.எம்.அய்யம்பெருமாள், மேலே கூறப்பட்ட 7 காரணங்களையுமே உடான்ஸ் என்கிறார்.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், “வருகிற 2012-ம் வருடத்தில் உலகம் அழியும் என்று, சமீபகாலமாக உலகம் எங்கும் தகவல் பரவி வருகிறது. இது வதந்தியா? அல்லது உண்மையா? என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
சூரியனில் இருந்துதான் கிரகங்கள் தோன்றி பிரபஞ்சத்தில் இயங்கி வருகின்றன. சூரியன் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனில் இருந்து வினாடிக்கு 750 டன் ஹைட்ரஜன் ஆவி வெளியாகி 746 டன் ஹீலியமாக வெளிப்படுகிறது. மீதமுள்ள 4 டன் ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படுகிறது.
விஞ்ஞானிகளின் அதிநுட்ப ஆராய்ச்சியில் இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பே இல்லை. பலர் கூறுவதுபோல் 2012-ல் கண்டிப்பாக உலகம் அழியாது. 2020-ம் ஆண்டு ஒரு குறுங்கோள் பூமியை தாக்கும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. குறுங்கோள் இடம் பெயர்ந்து பூமியை தாக்கும் நிலை ஏற்பட்டால் அக்னி ஏவுகணை மூலமாக குறுங்கோளை பொடிப்பொடியாக தகர்க்கும் சக்தி உலக ஆய்வுக்கூடத்தில் உள்ளது. ஆகவே எந்த சூழ்நிலையிலும் பூமிக்கு ஆபத்து ஏற்படாது.
உலக மக்களின் தேவைக்காக சூரிய சக்தி மூலமாக மின்சாரம் தயாரிக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. கடல்நீரை குடிநீராக மாற்றும் முயற்சியும் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே மின்சாரத்திற்காகவோ, குடிநீருக்காகவோ எதிர்காலத்தில் பயப்படவேண்டிய அவசியம் இருக்காது.
ஒரு மனித உடலின் செல்லில் இருந்து அல்லது மிருகத்தின் ஒரு செல் அணுவில் இருந்து குளோனிங் முறை செய்யப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வுகள் சோதனையாக மட்டுமே உள்ளது. இதை பெரும்பாலானோர் எதிர்த்து வருகின்றனர். ஆகவே இது ஆய்வுடன் நின்று விட்டது.
பூமி வெப்பமாவதை தடுக்க அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக மாசு கட்டுப்பாடு செய்து அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம்…” என்றார்.
நாமும்.. சாதகமானதையே நம்புவோமே!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...