பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின்
எண்ணிக்கையை, தேர்வுத்துறை இயக்குனரகம், இறுதி செய்தது. 8 லட்சம் மாணவ,
மாணவியர், பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். மார்ச் 1 அல்லது 4ம் தேதியில்,
தேர்வை துவக்கும் வகையில், தற்காலிக தேர்வு அட்டவணையை தயாரித்து, அரசின்
ஒப்புதலுக்கு, தேர்வுத்துறை அனுப்பியுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, ஆண்டுதோறும், மார்ச்
முதல் வாரத்தில் துவங்கும். முந்தைய தேர்வு, மார்ச், 8ல் துவங்கி, 30 வரை
நடந்தது. வரும் மார்ச்சில், பொதுத்தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை,
தேர்வுத்துறை, மும்முரமாக செய்து வருகிறது.
தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை
குறித்த புள்ளி விவரங்களை, நவம்பர் இறுதிக்குள் தர வேண்டும் என, ஏற்கனவே,
தேர்வுத்துறை கூறியிருந்தது. அதன்படி, மாவட்ட வாரியாக, மாணவ, மாணவியரின்
விவரங்கள் அடங்கிய பட்டியல்கள் பெறப்பட்டு, தற்போது, இறுதி
செய்யப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்படி, எட்டு லட்சம் மாணவ, மாணவியர், பிளஸ் 2
தேர்வை எழுதுகின்றனர். முந்தைய தேர்வை, 7.56 லட்சம் பேர் எழுதினர். வரும்
தேர்வை, கூடுதலாக 46 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
அறிவியல் பிரிவு மாணவ, மாணவியருக்கு, பிப்ரவரி
இரண்டாவது வாரத்தில், செய்முறைத் தேர்வு துவங்கி விடும். அதற்கு, இன்னும்
ஒன்றரை மாதங்களே உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.
குறிப்பாக, செய்முறை தேர்வில்
பங்கேற்பவர்களுக்கு, பதிவெண்கள் வழங்க வேண்டும். இதே எண்களைத் தான்,
எழுத்து தேர்விலும், மாணவ, மாணவியர் பயன்படுத்துவர். எனவே, ஜனவரியில்,
பொங்கல் பண்டிகை முடிந்ததும், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பதிவெண்கள்
விவரம், அந்தந்த பள்ளிகளில் அறிவிக்கப்பட உள்ளது.
செய்முறைத் தேர்வில், நான்கு லட்சம் மாணவர்கள்
பங்கேற்பர் என, கூறப்படுகிறது. இவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள்
வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே, தேர்வுக்கான தற்காலிக அட்டவணையை,
தமிழக அரசின் பார்வைக்கு, தேர்வுத்துறை அனுப்பி உள்ளது. மார்ச் 1 அல்லது
4ல் இருந்து, தேர்வை துவக்கும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக,
துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசின் ஒப்புதல் கிடைத்ததும், அட்டவணை
குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் கருத்து
கேட்கப்படும். தேர்வு காலத்தில் விழாக்களோ அல்லது விடுமுறை நாட்களோ அல்லது
மாணவருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏதாவது உள்ளதா என, கண்டறிந்து
கருத்துக்களை தெரிவிப்பர்.
அதனடிப்படையில் மாற்றங்கள் இருந்தால்,
திருத்தம் செய்யப்பட்டு, தேர்வு அட்டவணை இறுதி செய்யப்படும். அதன்பின்,
மீண்டும் அரசின் ஒப்புதல் பெற்று, அதிகாரப்பூர்வமாக, மாணவ, மாணவியருக்கு
அறிவிக்கப்படும்.
மார்ச் 1ம் தேதி, வெள்ளிக்கிழமை வருவதால், இந்த
தேதியில் இருந்து துவங்கும் அட்டவணை இறுதியாவதற்கு, அதிக வாய்ப்புகள்
இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...