ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போதைய 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
ஜூலையில் நடந்த முதல் டி.இ.டி., தேர்வை, 6.67 லட்சம் பேர் எழுதினர். இதில், வெறும், 0.33 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில் (இடைநிலை ஆசிரியர்), 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் (பட்டதாரி ஆசிரியர்), 713 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
பல தரப்பில் இருந்தும், விமர்சனம் எழுந்ததால், அக்டோபர், 14ல் நடந்த டி.இ.டி., மறுதேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கியதுடன், கேள்வித்தாள் மிகக் கடினமாக இல்லாத வகையிலும், டி.ஆர்.பி., பார்த்துக் கொண்டது. இதன் காரணமாக, தேர்ச்சி சதவீதம், ஓரளவுக்கு நன்றாக இருக்கும் என, டி.ஆர்.பி., எதிர்பார்த்தது.
நேற்று மாலை வெளியான தேர்வு முடிவில், 3 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. முதல் தாள் தேர்வில், 10 ஆயிரத்து 397 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 8,849 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இந்த, 19 ஆயிரத்து 246 பேரும், நிர்ணயிக்கப்பட்ட, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 6ம் தேதி, 32 மாவட்ட தலைநகரங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. தேர்ச்சி பெற்றவர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு கடிதங்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. வீட்டு முகவரிக்கு, அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட மாட்டாது.
தேர்ச்சி பெற்றவர்கள், அனைத்து அசல் சான்றிதழ்களுடன், சுய கையொப்பம் இட்ட இரண்டு செட் நகல் சான்றிதழ்களுடன், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள், கூடுதலாக, சமீபத்திய வேலைவாய்ப்பு பதிவு அட்டையை, எடுத்துச்செல்ல வேண்டும்.
தேர்வு முடிவுகள், டி.ஆர்.பி., இணையதளத்தில்(www.trb.tn.nic.in) நேற்றிரவு வெளியிடப்பட்டன. தேர்வர்கள், தங்களது பதிவு எண்களை பதிவு செய்தால், மதிப்பெண்களுடன் கூடிய, தேர்வு முடிவுகளை அறியலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...