பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான, தமிழக
அரசால் வெளியிடப்பட்ட அரசாணை இன்னும் நடைமுறைக்கு வராத நிலை தொடர்கிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பார்வையற்ற மாற்றுத்
திறனாளிகள் கல்வி பயிலவும், பணியில் சேரவும், 1 சதவீத இட ஒதுக்கீடு
அளிக்கப்பட்டது. இதற்கான அரசாணை, 2006ல் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின்
படி, இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதில்லை. இதனால், மாணவர்கள்
கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
குறிப்பாக,"நெட், ஸ்லெட்&' தேர்வில்
தேர்ச்சி பெற்றாலும், பிஎச்.டி., பயில இடம் கிடைப்பதில்லை. இதே போல,
ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள்,
ஆசிரியராக பணியமர்த்தப்படுவதில்லை.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம்
நிரப்பும் போதும், 1 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப் படுவதில்லை. அரசு
தேர்வில் வெற்றி பெற்றவர்களும், இதுவரை பணியமர்த்தப்படாமல் உள்ளனர்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும்,
பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளிகளில், 42 சதவீதம் பார்வையற்ற மாற்றுத்
திறனாளி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் என, 2002ல் வெளியிடப்பட்ட
அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த உத்தரவும், அமலுக்கு
வரவில்லை.
முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வு
ஊதியமாக, 1,000 ரூபாய் வழங்கப்படுவது போல, பார்வையற்ற மாற்றுத்
திறனாளிகளின் உதவித் தொகையை, 450 ரூபாயிலிருந்து, 1,000 ரூபாயாக உயர்த்தி
தர வேண்டும். பார்வையற்ற மாற்றுத் திறனாளியை திருமணம் செய்து கொள்ளும்,
பார்வையுள்ளவர்களின், கல்வி தகுதிக்கேற்ப, அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை
அளிக்க வேண்டும்.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் படிக்கும்,
பார்வையற்ற மாணவர்களுக்கான, கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்
தொகையை, இருமடங்காக உயர்த்தி தர வேண்டும். பார்வையற்ற மாணவர்களின் பாட
நூல்களையும், மின் நூல்களாக மாற்றி, பேசும் மென்பொருள் பொருத்தப்பட்ட
மடிக்கணினியை இலவசமாக வழங்க வேண்டும் என, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பார்வையற்ற பட்டதாரிகளுக்கான கலை,
இலக்கிய சங்கத்தினர் கூறியதாவது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின்
கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி, முதல்வரின் தனிப்பிரிவு, சமூகநலத்துறை
அமைச்சர் ஆகியோருக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்காக
மூன்றாண்டுகளாக அரசுடன் போராடி வருகிறோம். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி,
போராட்டம் நடத்த உள்ளோம்,இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...