உடுமலை அருகே அரசு பள்ளி வளாகத்தை அசுத்தப்படும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பள்ளி முன்பு அப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
உடுமலை நகராட்சி, ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளிலுள்ள பள்ளி வளாகங்களை இரவு நேரங்களில் சிலர் மதுபானம் குடிப்பதற்கும், கழிப்பிடத்திற்காவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மாணவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டி.வி., பட்டணம் பழனி ஆண்டவர் மில்ஸ் நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தை சிலர் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தியுள்ளனர். மாணவர்கள் வகுப்பறை மற்றும் கட்டடம் முழுவதும் அசுத்தம் செய்து வைத்துள்ளதால், பள்ளிக்குள்ளே செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசியுள்ளது.
இதை கண்ட ஆசிரியர்கள், மாணவர்களும் அதிர்ச்சியடைந்து, மன உளைச்சலுக்கு ஆளாகினர். பின் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோன்று சில நாட்கள் இதே சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த ஆசிரியர்கள், கல்விக்குழு, பள்ளிமேலாண்மைக் குழு உறுப்பினர்களை அழைத்து, கூட்டம் நடத்தினர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால், பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது கடினம்; பள்ளி வளாகம் என்றாலே தூய்மையாக வைத்திருக்க வேண்டும்; கோவில் போன்ற பள்ளி வளாகத்தை சிலர் அசுத்தம் செய்வதால், மாணவர்களும் படிக்க முடியாமல் திணறுகின்றனர் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, பள்ளி வளாகத்தை அசுத்தப்படுத்தாமல் இருக்க பொதுமக்களிடம் அறிவுறுத்துவோம்; அதையும் மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைத்துவிடலாம் என முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, பள்ளி முன்பு வைக்கப்பட்ட எச்சரிக்கை பலகையில், "கல்வி கற்பிக்கும் பள்ளியை சிலர் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். பள்ளி வளாகத்தை அசுத்தப்படுத்தவோ, கழிப்பறையாக பயன்படுத்தவோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது. மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என எழுதப்பட்டுள்ளது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் அப்பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
"கல்வி கற்கும் வளாகம் தூய்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், சிலர் செய்யும் செயல்களால் அசுத்தப்படுகிறது. இதை தவிர்க்க பள்ளி முன்பு எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டது. தற்போது யாரும் பள்ளி வளாகத்திற்குள் வருவதில்லை, என்றார் பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார்.
பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க ஆசிரியர்களும், மாணவர்களும் முயற்சித்தால் போதாது; அப்பகுதியை சேர்ந்த அனைவரும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே சாத்தியமாகும். அரசு சொத்து என்றாலும், மாணவர்கள் படிக்கும் வளாகம் என்பதால், தூய்மையாக வைத்திருக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்பதே கல்வி ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...