மாநில திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 20 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு, மென் திறன்கள் மற்றும் வேலை வாய்ப்புத் திறன்கள் தொடர்பாக பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும், மூன்றாமாண்டு மாணவர்களுக்கு, மொத்தம் 235 மணி நேரங்கள் பயிற்சியளிப்பது இத்திட்டத்தின் நோக்கம். இதன்மூலம், கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும் மாணவர்கள், ஐ.டி, ஐ.டி.இ.எஸ், சில்லறை வர்த்தகம் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் பணிவாய்ப்புகள் பெறுவது எளிதாக்கப்படும்.
தகவல் தொடர்பு திறன்கள், ஆங்கில உச்சரிப்பு மற்றும் இலக்கணம், வாடிக்கையாளர் சேவை திறன்கள், பி.சி அப்ளிகேஷன்ஸ், சட்டச்சு திறன்கள், நேர்முகத் தேர்வுக்கு தயாராதல் போன்ற அம்சங்கள் இப்பயிற்சி திட்டத்தில் அடங்கும். இவைத்தவிர, ஐ.டி.இ.எஸ், சில்லறை வர்த்தகம் மற்றும் விருந்தோம்பல் போன்ற குறிப்பிட்ட துறைகளுக்கு தேவையான திறன் வளர்ப்பு பயிற்சிகளிலும் கவனம் செலுத்தப்படும்.
இப்பயிற்சி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அனுபவம் வாய்ந்த தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் கல்வி நிறுவனங்கள், மாநிலம் முழுவதுமுள்ள 62 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுடன் இணைந்து செயல்படும்.
இந்த தனியார் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதற்கான ஒத்துழைப்பை, மாநில அரசின் கல்லூரி கல்வித்துறை வழங்கும். கல்லூரி இறுதியாண்டில், 6 முதல் 7 மாதங்கள் வரை நீடிக்கும் இந்த பயிற்சிகள், வாரத்திற்கு தோராயமாக 8 மணிநேரங்கள் வரை வழங்கப்படும்.
இத்தகைய பயிற்சிகள், கிராமப்புறங்களிலிருந்தும், தமிழ் வழியில் கல்விக் கற்றும் வரும் மாணவர்களுக்கு, பேருதவியாக இருந்து, அவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும். பயிற்சியளிக்கும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உதவிக் குழுவானது, ஐ.டி. ஐ.டி.இ.எஸ், சில்லறை வணிகம் மற்றும் விருந்தோம்பல் துறை நிறுவனங்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, மாணவர்களின் வேலை வாய்ப்புகளை உறுதிசெய்யும் விதமாக பணியாற்றும்.
படிப்பு மற்றும் பயிற்சிகளை முடித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் மற்றும் வேலூர் ஆகிய 7 இடங்களில் நடத்தப்படும். இதன்மூலம், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மாணவர்கள் எளிதாக கலந்துகொள்ள வழியேற்படும். மாநில அரசின் இந்த புதிய திட்டத்தை, கல்வியாளர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...