இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
புதிய சார்நிலை கருவூலங்கள்
தமிழகத்தில் கருவூலக கணக்குத்துறையின் கீழ் 32 மாவட்ட கருவூலங்கள் மற்றும் 206 சார் கருவூலங்கள் உள்ளன. மக்களை நாடி அரசு என்ற நோக்கத்தின் அடிப்படையில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே அரசு அலுவலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அதிகரிக்கப்பட்ட அரசு அலுவலகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு கருவூலங்களின் எண்ணிக்கை உயரவில்லை.இதைக் கருத்தில் கொண்டு ஒரு வருவாய் வட்டத்திற்கு ஒரு சார் கருவூலம் என்ற அடிப்படையில் கருவூல அமைப்பினை சீரமைத்து சார் கருவூலமில்லாத வருவாய் வட்டங்களில் புதிய சார் கருவூலங்களை ஏற்படுத்திட முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.
14 இடங்களில் அமைக்கப்படும்
அதன் அடிப்படையில் 2012–13 ஆம் நிதி ஆண்டில் புதியதாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துரை, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்தூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர், கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம், நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள குத்தாலம், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை, சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி, கெங்கவல்லி, நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர்,திருச்சி மாவட்டத்திலுள்ள மண்ணச்சநல்லூர், திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துகுளம், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு, விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் ஆகிய 14 வருவாய் வட்டங்களில் புதியதாக சார் கருவூலம் அமைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
புதிய பணி இடங்கள்
இந்தக் கருவூலங்களில் பணிபுரிய ஒவ்வொரு சார் கருவூல அலுவலகத்திற்கும் உதவி கருவூல அலுவலர் பணியிடம் 1, கூடுதல் சார்நிலைக் கருவூல அலுவலர் பணியிடம் 1, கணக்கர் பணியிடம் 2, இளநிலை உதவியாளர் பணியிடம் 1, அலுவலக உதவியாளர் பணியிடம் 1 என 6 பணி இடங்களை புதியதாக தோற்றுவிக்கவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு தொடரும் செலவினமாக 3 கோடியே 33 லட்சம் ரூபாயும், தொடரா செலவினமாக 84 லட்சம் ரூபாயும் ஏற்படும்.
புதிய கட்டிடங்கள்
நீதி மற்றும் நீதிசாரா முத்திரைத் தாள்கள், பல துறைகளிலிருந்து பெறப்படும் சேம காப்பு பொருட்கள் ஆகியவற்றை வலுவறையில் வைத்து பாதுகாக்கும் பணி உள்பட பல்வேறு பொறுப்புமிக்க பணிகளை அனைத்து சார் கருவூலங்களும் செய்து வருவதால், இந்த கருவூலங்கள் சொந்தக் கட்டடங்களில் இயங்குவது மிகவும் இன்றியமையாததாகிறது. இதைக் கருத்தில் கொண்டு மொத்தமுள்ள 206 சார் கருவூலங்களில், வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் 54 கருவூலங்களில், முதற்கட்டமாக 14 கருவூலங்களுக்கு 7 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த புதியக் கட்டடங்கள், மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் மற்றும் மேலூர், நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி, நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு, பரமத்தி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம், உடுமலைப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை மற்றும் திருத்தணி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம், திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ஆகிய 14 இடங்களிலுள்ள சார்நிலைக் கருவூலங்களுக்காக கட்டப்படும்.
தூத்துக்குடி மாவட்ட அலுவலகம்
இதேபோன்று, மொத்தமுள்ள 32 மாவட்ட கருவூலங்களில் 29 மாவட்டக் கருவூலங்கள் சொந்த கட்டடங்களில் இயங்கி வருகின்றன. மீதமுள்ள 3 மாவட்டக் கருவூலங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டக் கருவூலத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் 862 சதுர மீட்டர் பரப்பளவில் 1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...