நவம்பர் இறுதியில் ஆசிரியர் தகுதி மறுதேர்வு முடிவுகள்
ஆசிரியர் தகுதி மறுதேர்வு முடிவுகள் வரும் நவம்பர் இறுதியில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கடுத்த ஒரு மாதத்தில் புதிய தேர்வு முறையின் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு டிசம்பரில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இந்தப் புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வழக்கத்தைவிட கூடுதலாக நேரம் ஆகும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
6 லட்சம் பேர்: தமிழகம் முழுவதும் 1,094 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்வை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். எந்தவொரு பிரச்னையும் இன்றி இந்தத் தேர்வு மிகவும் அமைதியாக நடந்து முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தேர்வின் அடிப்படையில் 22 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதற்காக ஆசிரியர் தகுதி மறுதேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
காலையில் நடைபெற்ற முதல் தாளை 2 லட்சத்து 74 ஆயிரம் பேர் எழுதினர். பிற்பகலில் நடைபெற்ற இரண்டாம் தாளை 3 லட்சத்து 73 ஆயிரம் பேர் எழுதினர். சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இரண்டு தாள்களையும் எழுதினர்.
தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டது குறித்து பெரும்பாலான தேர்வர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். முதல் தாளில் ஆங்கிலமும், இரண்டாம் தாளில் தமிழும் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.
3 வாரங்களுக்குப் பிறகு விடைகள் வெளியீடு: தமிழகம் முழுவதிலுமிருந்து சென்னைக்கு இந்த விடைத் தாள்கள் அனைத்தும் கொண்டுவரப்படும். அதன் பிறகு மூன்று வாரங்கள் இந்த விடைத் தாள்கள் ஸ்கேன் செய்யும் பணி நடைபெறும்.
விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, கேள்விகளுக்கு உரிய சரியான விடைகள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு: கணிதப்பிரிவு மாணவர்கள் ஏமாற்றம்
இன்று நடந்த டி.இ.டி., தேர்வில் கணித பாடத்தில் கேள்விகள் குறைக்கப்பட்டதும், கடினமாக இருந்ததாலும் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
டி.இ.டி., தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு இன்று மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 6.16 லட்சம் தேர்வர்கள் கலந்து கொண்டனர். மதியம் நடந்த இரண்டாவது தேர்வில், அறிவியல், உளவியல், கணிதம் என ஒவ்வொரு பாடத்திலும் 30 கேள்விகள் கேட்கப்பட வேண்டும். ஆனால் கணிதத்தில் 30 கேள்விகளுக்கு பதில் 20 கேள்விகளே கேட்கப்பட்டன. இதற்கு பதில் அறிவியலில் கூடுதலாக 10 கேள்விகள் சேர்க்கப்பட்டு 40 கேள்விகள் கேட்கப்பட்டன. கணிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாகவும் இருந்துள்ளது. இதனால் 20 மதிப்பெண்களை அனைத்து மாணவராலும் பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணித பிரிவு மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.2013 ஜூனில் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தபடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூனில் நடத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தாலும், ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு என்று 4 மாதங்களில் 2 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
எனவே, இந்த ஆண்டு இறுதியிலோ, அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ மற்றொரு தேர்வை நடத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இப்போதுள்ள அரசாணையின்படி, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடியும். ஆண்டுக்கு இருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பாக இதுவரை அரசாணை பெறப்படவில்லை. விரைவில் இந்த அரசாணையைப் பெறுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் 2,448 பேருக்கு ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதில் 202 பேர் உரிய தகுதிகளுடன் இல்லை என்று தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அனைவரது மதிப்பெண்ணையும் மீண்டும் சரிபார்க்க வேண்டியுள்ளதால், ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற 2,246 பேருக்கும் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.