"அடுக்கு மாடி வீடுகளில், மாணவர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் தங்கியிருந்தால், அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு, வர்த்தகக் கட்டணம் வசூலிக்க முடியாது" என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த, முத்துலட்சுமி, ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனு: எங்களுக்குச் சொந்தமான, ஐந்து அடுக்கு மாடி வீட்டில், இரண்டு முதல், நான்காவது மாடி வரை, நாங்கள் வசித்து வந்தோம். பின், இந்த, மூன்று மாடிகளும், மாணவர்கள் மற்றும் அருகில் உள்ள ஜவுளிக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்குவதற்காக, வாடகைக்கு விடப்பட்டது.
2011ம் ஆண்டு டிசம்பரில், மின்வாரிய உதவிப் பொறியாளர், சோதனை மேற்கொண்டார். மின்சாரப் பயன்பாட்டை ஆய்வு செய்து, மூன்று மாடிகளும் வர்த்தக நோக்கத்துக்காக பயன்படுத்தப்படுகிறது என, முடிவு செய்தார்; அதற்குரிய கட்டணத்தை நிர்ணயித்தார். எங்கள் வீட்டை, வணிக வளாகமாகக் கருதுவது சரியல்ல. எனவே, வணிக வளாகத்திற்கான மின்சாரக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: அடுக்கு மாடிகளில் உள்ள அறைகளில், ஊழியர்கள் தங்கியிருந்ததாக, உதவிப் பொறியாளரின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை, வணிக ரீதியில் கணக்கிட்டுள்ளனர். அதில், சர்ச்சை இல்லை.
சொத்து வரி நிர்ணயிக்க, தரை தளம் மற்றும் முதல் தளத்தை, வணிக ரீதியில் கணக்கிட்டுள்ளனர். அதே நேரத்தில், இரண்டு முதல், நான்காம் மாடிகளை, குடியிருப்பு பகுதியாகக் கருதி, சொத்து வரியை, நகராட்சி கணக்கிட்டுள்ளது. எனவே, இந்த, மூன்று மாடிகளையும், வணிக வளாகமாக, உதவிப் பொறியாளர் கருதியதில், எந்த அடிப்படையும் இல்லை.
மாணவர்கள், ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கியிருந்ததாலேயே, அந்த அடுக்கு மாடிகளை, வணிக வளாகமாகக் கருதி விட முடியாது. ஊழியர்களுக்கான வாடகையை, ஜவுளிக் கடை நிறுவனம் அளிப்பதால், அது வணிகமாகி விடாது. அங்கு, எந்த வர்த்தக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே, வணிக வளாகமாகக் கருதி, உதவி நிர்வாகப் பொறியாளர் உத்தரவிட்டது, ரத்து செய்யப்படுகிறது.
வணிக வளாகமாகக் கருதி, ஏற்கனவே வசூலித்த மின் கட்டணத்தை, எதிர்காலத்தில் சரி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரி பரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...