ஆசிரியர் நியமனத்தில் எத்தகைய இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றுவது என்பது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இப்போதுள்ள முறையின்படி, 200 புள்ளி இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இந்த முறையின் கீழ் அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்களுக்கு உரிய இடங்கள் கிடைக்கவில்லை என்றும், தகுதியான பலரும் பணி வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இதில் பின்பற்றப்பட வேண்டிய இடஒதுக்கீட்டு முறை தொடர்பாக அரசிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,895 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு மே 27-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் மற்றும் உத்தேச தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகளில் தவறு உள்ளதாகக் கூறி தேர்வர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகளில் 50-க்கும் மேற்பட்ட விடைகள் தவறாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி தேர்வுப் பட்டியலை ரத்து செய்தது. நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் புதிதாக அனைத்து விடைத்தாள்களையும் மறுமதிப்பீடு செய்யவும் உத்தரவிட்டது.
எனவே உயர் நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு முக்கிய விடைகளில் தவறு உள்ளதாகக் கூறியுள்ளது. இனிவரும் காலங்களில் முக்கிய விடைகளுக்கு துறை நிபுணர்களையே பொறுப்பேற்கச் செய்யும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும்.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அனைத்து விடைத்தாள்களும் விரைவில் மறுமதிப்பீடு செய்யப்படும். விடைத்தாள்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளதால், திருத்தப்பட்ட முக்கிய விடைகளைக் கொண்டு கம்ப்யூட்டரில் மறுமதிப்பீடு செய்யப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் சில நாள்களில் முடிக்கப்பட்டுவிடும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...